அமெரிக்காவில் நஷ்வில்லே குண்டுவெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலா?


அமெரிக்காவில் நஷ்வில்லே குண்டுவெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலா?
x
தினத்தந்தி 28 Dec 2020 6:47 PM GMT (Updated: 28 Dec 2020 7:39 PM GMT)

அமெரிக்காவில் டென்னிசி மாகாணத்தின் நாஷ்வில்லே நகரில் கடந்த 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

நாஷ்வில்லே, 

அமெரிக்காவில் டென்னிசி மாகாணத்தின் நாஷ்வில்லே நகரில் கடந்த 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஏராளமான கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அமெரிக்க மத்திய போலீஸ் படையான எப்.பி.ஐ. விசாரணையை முடுக்கி விட்டது. இதனிடையே குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து மனித உடல் உறுப்புகள் மீட்கப்பட்டன. 

இதனைத்தொடர்ந்து 63 வயதான அந்தோணி குவின் வார்னர் என்பவர் இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருந்துள்ளார் என்றும் அவர் குண்டு வெடிப்பில் சிக்கி உடல் சிதறி உயிரிழந்து விட்டார் என்றும் எப்.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம் குண்டு வெடிப்புக்கான காரணம் என்ன என்பது இன்னும் மர்மமாகவே உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த குண்டு வெடிப்பில் வார்னர் ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதால் இது ஒரு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் அதை உறுதிப்படுத்துவதற்கு வேறு எந்த உறுதியான ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்பதால் பல்வேறு கோணங்களில் இது பற்றி தீவிரமாக விசாரித்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து மூத்த எப்.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறுகையில் “இதற்கான விடைகள் விரைவாக கிடைக்காது. இன்னும் எங்கள் அணியின் முயற்சிகள் தேவைப்படும். எங்கள் விசாரணை தொடர்கையில் இந்த கேள்விகளுக்கு எங்களால் பதில் அளிக்க முடியும் என்றாலும் இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த பதில்கள் எதுவும் போதுமானதாக இருக்காது” என்றார்.


Next Story