மக்கள் தொகையில் 20 சதவீதத்துக்கு கொரோனா தடுப்பூசி வாங்க உதவ வேண்டும்; இந்தியாவுக்கு நேபாளம் கோரிக்கை


மக்கள் தொகையில் 20 சதவீதத்துக்கு கொரோனா தடுப்பூசி வாங்க உதவ வேண்டும்; இந்தியாவுக்கு நேபாளம் கோரிக்கை
x
தினத்தந்தி 30 Dec 2020 11:31 PM GMT (Updated: 30 Dec 2020 11:31 PM GMT)

தங்களின் மக்கள் தொகையில் 20 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை வாங்க நேபாளம் இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.

காத்மாண்டு, 

நமது அண்டை நாடான நேபாளமும் கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 1,800-க்கும் மேற்பட்டோரின் உயிரை இந்த வைரஸ் பறித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் நேபாளத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்கு நாங்கள் முன்னுரிமை அளிப்போம் என மத்திய அரசு கடந்த மாதம் உறுதியளித்தது.

இந்த நிலையில் தங்களின் மக்கள் தொகையில் 20 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை வாங்க நேபாளம் இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. இது தொடர்பாக நேபாள அரசு இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

இதுகுறித்து நேபாளத்தின் கொரோனா தடுப்பூசி ஆலோசனை குழுவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ‌ஷியாம் ராஜ் உப்ரேதி கூறுகையில் ‘‘பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருந்து நிறுவனங்களின் 15 தடுப்பூசிகள் இறுதி கட்ட சோதனையில் உள்ளன. 

அந்த தடுப்பூசிகளை பெறுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகிறது. எனினும் கொரோனோ தடுப்பூசியை விரைவாக பெற 20 சதவீத நேபாளிகளுக்கு தடுப்பூசிகளை வாங்குமாறு அரசு இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. இந்தியா மூலம் கிடைக்கும் தடுப்பூசிகளுக்கு நேபாளம் பணம் செலுத்தும்’’ என கூறினார்.

Next Story