ஏடன் விமான நிலையம் வெடிகுண்டு தாக்குதல் 25 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்: ஈராக் கண்டனம்


ஏடன் விமான நிலையம் வெடிகுண்டு தாக்குதல் 25 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்: ஈராக் கண்டனம்
x
தினத்தந்தி 31 Dec 2020 12:26 PM GMT (Updated: 31 Dec 2020 12:26 PM GMT)

ஏமனில் புதிதாக பதவியேற்ற அமைச்சரவை உறுப்பினர்கள் தரையிறங்கிய விமான நிலையத்தில் நடந்த திடீர் வெடிகுண்டு தாக்குதலுக்கு இராக் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏடன்,

ஏமன் நாட்டின் தெற்கே உள்ள ஏடன் விமான நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை எந்த ஒரு பயங்கரவாத இயக்கமும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை. எனினும், ஹவுத்தி ஏவுகணைகள் தாக்கியதாக கூறப்படுகிறது. 

சவுதி அரேபியாவிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏமன் அரசாங்க அமைச்சர்கள் வந்த விமானம், ஏடனில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளது.

 அமைச்சர்கள், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் விமானத்தில் வந்த போது இந்த தாக்குதல் நடைபெற்றது. அவர்கள் விமானத்திற்குள் திரும்பிச் சென்றுவிட்டதால் உயிர் தப்பினர்.

எனினும், பிரதமர் மயீன் அப்துல் மாலிக்  மற்றும் ஏமனுக்கான சவுதி தூதர் மொகமத் சயீத் அல் ஜாபர்  உட்பட அமைச்சரவை உறுப்பினர்கள் பாதுகாப்பாக நகரின் ஜனாதிபதி மாளிகைக்கு மாற்றப்பட்டனர். விமானத்தில் வந்த பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  ஏமன் நாட்டின் விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு இராக் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இராக் அதிபர் அகமது அல்-சஹாஃப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

ஏமன் நாட்டில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை இராக் கடுமையாக கண்டிக்கிறது. சகோதர நாடான ஏமனுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் இராக் நிராகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏமன் விமான நிலையத்தின் மீதான பயங்கர தாக்குதலை ரஷியா, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Next Story