நவால்னியை விடுதலை செய்ய வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானோர் ரஷ்யாவில் போராட்டம்


நவால்னியை விடுதலை செய்ய வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானோர் ரஷ்யாவில் போராட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2021 12:17 AM GMT (Updated: 24 Jan 2021 12:23 AM GMT)

நவால்னியை விடுதலை செய்ய வலியுறுத்தி ரஷ்யாவில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாஸ்கோ,

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது. ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது . சிகிச்சையில் குணம் அடைந்ததையடுத்து நவால்னி ரஷ்யா திரும்பினார். ரஷ்யா திரும்பிய நிலையில் நவால்னி கைது செய்யப்பட்டார். பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நவால்னி சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, நவால்னியை விடுதலை செய்ய வலியுறுத்தி ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் சில இடங்களில் வன்முறை வெடித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில்,  நவால்னி ஆதரவாளர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.Next Story