அமெரிக்க ராணுவத்தில் 3-ம் பாலினத்தவர்கள் பணியாற்ற இருந்த தடை நீக்கம் - ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி


அமெரிக்க ராணுவத்தில் 3-ம் பாலினத்தவர்கள் பணியாற்ற இருந்த தடை நீக்கம் - ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி
x
தினத்தந்தி 26 Jan 2021 9:16 PM GMT (Updated: 26 Jan 2021 9:16 PM GMT)

அமெரிக்க ராணுவத்தில் 3-ம் பாலினத்தவர்கள் பணியாற்ற விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார் ஜனாதிபதி ஜோ பைடன்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்ற முதல் ஆண்டில், அந்த நாட்டு ராணுவத்தில் 3-ம் பாலினத்தவர்கள் பணியாற்றத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளை அதிரடியாக ரத்து செய்து புதிய நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.‌ அந்த வகையில் அமெரிக்க ராணுவத்தில் 3-ம் பாலினத்தவர் பணியாற்ற விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வது தொடர்பாக வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் புதிய ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டினுடன், ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் தீவிர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்குப்பின், ராணுவத்தில் 3-ம் பாலினத்தவர்கள் பணியாற்ற விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

அமெரிக்காவில் பிறந்த அனைத்து தகுதியுள்ள மக்களும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றலாம். உலகளவில் அமெரிக்கா வலிமையான, அனைவருக்கும் ஏற்ற நாடு. அதில் ராணுவம் எந்தவிதத்திலும் சளைத்தது இல்லை.

ராணுவத்தின் நலனுக்காகவும், தேசத்தின் நன்மைக்காகவும் தகுதிவாய்ந்த அனைத்து அமெரிக்க மக்களும் ராணுவத்தில் பணியாற்றலாம். பாலினத்தின் அடிப்படையில் ராணுவத்தில் எந்தப் பாகுபாடும் இருக்கக்கூடாது. இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டு, அடுத்த 60 நாட்களில் என்னென்ன மாற்றங்கள், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறித்து அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story