கொரோனா பாதிப்பு: செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி ரஷ்யாவில் தொடக்கம்


கொரோனா பாதிப்பு:  செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி ரஷ்யாவில் தொடக்கம்
x
தினத்தந்தி 27 May 2021 2:54 AM GMT (Updated: 27 May 2021 2:54 AM GMT)

ரஷ்யாவில் செல்ல பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

மாஸ்கோ,

உலக நாடுகளை துயரத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா பெருந்தொற்றுக்கு இதுவரை பல லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.  கோடிக்கணக்கானோர் பாதிப்படைந்து உள்ளனர்.  மனிதர்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த இந்த தொற்று விலங்குகளுக்கும் பரவியது.

கொரோனா பாதிப்புகளில் இருந்து வன விலங்குகளும் தப்பவில்லை.  அந்த வகையில் ஐதராபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சமீபத்தில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இதேபோன்று, உத்தர பிரதேசத்தின் எட்டவாவில் உள்ள சபாரி பூங்காவில் 2 பெண் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.  இதனை தொடர்ந்து அவை இரண்டும் மற்ற சிங்கங்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டன.

எனினும், கொரோனா தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் இருந்து சில வதந்திகள் நிலவி வந்தன.  இதனால், அச்சமடைந்த பலர் தங்களது வளர்ப்பு பிராணிகளை துரத்தி விட்டுள்ளனர்.  அவை தெருக்களில் ஆதரவின்றி கைவிடப்படும் சூழல் ஏற்பட்டது.

இதற்கு எதிராக பல சமூக ஆர்வலர்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் நல அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.  இந்த வதந்திகளில் உண்மையில்லை என மருத்துவர்கள், நிபுணர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களும் கூறினர்.

இதுபற்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர், மருத்துவர் ரன்தீப் குலேரியா கூறும்பொழுது, விலங்குகளிடம் இருந்து கொரோனா தொற்று மனிதர்களுக்கு பரவியதற்கான தரவுகள் எதுவும் இல்லை.

கொரோனாவின் முதல் அலையில் நியூயார்க்கில் விலங்கியல் பூங்காவில் மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட தரவுகளே நம்மிடம் உள்ளன என கூறினார்.

இதேபோன்று, செல்ல பிராணிகளுக்கான சிறப்பு டாக்டர் சந்தீப் சிங் கூறும்பொழுது,
வளர்ப்பு பிராணிகள் கொரோனா தொற்றை மனிதர்களுக்கு பரப்புவதில்லை.  இந்த வதந்திகளை மக்கள் தவிர்க்க வேண்டும்.  நாய்கள், பூனைகள் போன்றவற்றை தெருக்களில் விட வேண்டிய அவசியமில்லை.

இவை அனைத்தும் வதந்திகளே.  வளர்ப்பு பிராணிகளிடம் இருந்து கொரோனா தொற்று பரவியதற்கான ஆபத்து உள்ளது என எந்த அமைப்பும் இதுவரை கூறவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், ரஷ்யாவில் தங்களுடைய செல்ல பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.  இதனை முன்னிட்டு ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.


Next Story