உலக செய்திகள்

இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை தாக்கியதா? ‘அப்பட்டமான பொய்’ என்று இந்திய தூதரகம் மறுப்பு + "||" + India denies attack claim on Sri Lankan fishermen by Indian Navy

இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை தாக்கியதா? ‘அப்பட்டமான பொய்’ என்று இந்திய தூதரகம் மறுப்பு

இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை தாக்கியதா? ‘அப்பட்டமான பொய்’ என்று இந்திய தூதரகம் மறுப்பு
இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை தாக்கியதாக கூறப்படுவது அப்பட்டமான பொய் என்று இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
போதை மருந்து கேட்டனர்
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவது பல்லாண்டுகளாக நடந்து வருகிறது. தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற 
செயல்களிலும் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில், திடீர் திருப்பமாக, இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இலங்கையை சேர்ந்த 13 மீனவர்கள் கூறியதாக இச்செய்தியை 
இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அந்த மீனவர்கள் கூறியதாவது:-
நாங்கள் 13 மீனவர்கள் சேர்ந்து 2 மீன்பிடி படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றோம். கடந்த 4-ந் தேதி நாங்கள் சர்வதேச கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இந்திய கடற்படை வீரர்கள் அங்கு வந்து எங்களை அடித்து உதைத்தனர். நாங்கள் மீனவர்கள் என்று கூறியபோதிலும், எங்களிடம் போதை மருந்து கேட்டனர். இவ்வாறு அவர்கள் கூறியதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஒழுக்கமான படை
இந்த செய்தி குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், அதன்பிறகு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் இலங்கை மீன்வள அமைச்சக செயலாளர் இந்து ரத்னநாயகே தெரிவித்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 


இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை தாக்கியதாக வெளியான செய்தி, அப்பட்டமான பொய். அத்தகைய சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இந்திய கடற்படை மிகவும் ஒழுக்கமானது. அப்பழுக்கற்ற முறையில் தனது கடமையை செய்து வருகிறது. இந்தியா-இலங்கை இடையே மீனவர்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் மனிதாபிமான முறையிலும், பேச்சுவார்த்தை மூலமாகவும் தீர்ப்பதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது.

இவ்வாறு இந்திய தூதரகம் கூறியுள்ளது.