ஹாங்காங்: ஜனநாயக ஆதரவு பத்திரிக்கையாளர் கைது


ஹாங்காங்: ஜனநாயக ஆதரவு பத்திரிக்கையாளர் கைது
x
தினத்தந்தி 28 Jun 2021 9:13 PM GMT (Updated: 28 Jun 2021 9:13 PM GMT)

ஹாங்காங்கில் செயல்பட்டு வந்த ஆப்பிள் டெய்லி செய்தித்தாளின் மூத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாங்காங்,

தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு ஹாங்காங்கில் கடந்த ஆண்டு அமல்படுத்தியது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் மீது சீனா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், ஹாங்காங்கில் செயல்பட்டு வந்த பிரபல ஜனநாயக ஆதரவு செய்தித்தாளான ‘ஆப்பிள் டெய்லி’ பத்திரிக்கையின் நிறுவனத்தலைவர் ஜிம்மி லேயை ஹாங்காங் போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த பத்திரிக்கை நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை ஹாங்காங் நிர்வாகம் எடுத்தது. ஆப்பிள் டெய்லி நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த செய்தித்தாள் நிறுவனம் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கிடையில், சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டதால் ஆப்பிள் டெய்லி பத்திரிக்கை தனது பதிப்பை கடந்த வாரம் நிறுத்தியது. அந்த பத்திரிக்கை மீது நடத்தப்பட்ட அடுத்தடுத்த சோதனைகளில் அந்த பத்திரிக்கையில் பணியாற்றிவந்த 5-க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆப்பிள் டெய்லி பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் பஃங் வுய் ஹாங் நேற்று கைது செய்யப்பட்டார். 57 வயதான பஃங் வுய்-ஹாங் நேற்று ஹாங்காங்கில் இருந்து விமானம் மூலம் இங்கிலாந்து செல்ல முயன்றார். 

ஆனால், அவர் ஹாங்காங் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார். வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்துகொண்டு நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆப்பிள் டெய்லி பத்திரிக்கையாளர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் ஹாங்காங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story