ஆப்கானிஸ்தான் மீண்டும் தீவிரவாதிகள் கூடும் கூடாரமாக மாறிவிடக் கூடாது - சீனா கருத்து


ஆப்கானிஸ்தான் மீண்டும் தீவிரவாதிகள் கூடும் கூடாரமாக மாறிவிடக் கூடாது - சீனா கருத்து
x
தினத்தந்தி 21 Aug 2021 9:55 AM GMT (Updated: 21 Aug 2021 9:55 AM GMT)

ஆப்கானிஸ்தான் மீண்டும் தீவிரவாதிகள் கூடும் கூடாரமாக மாறிவிடக் கூடாது என சீனா தெரிவித்துள்ளது.

பீஜிங்,

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதையடுத்து, அந்நாட்டில் தலீபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபுல் உள்பட பல முக்கிய நகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தற்போது ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளை தலீபான்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் தலீபான்களின் ஆட்சிக்கு பயந்து அந்நாட்டு மக்கள் விமானத்தில் மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்து ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. வெளிநாடுகளில் வாழும் ஆப்கான் மக்கள் தாங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றும் கூறி வருகின்றனர். 

ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களையும், தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரையும் பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. தலீபான்களின் ஆட்சியை அங்கீகரிப்பது குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை என ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், “ஆப்கானிஸ்தானின் இப்போதைய தேவை அரசியல் ரீதியான அமைதி” என சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷான் முகமதுடன் பேசியபோது அவர் கூறியதாவது;-

“ஆப்கானிஸ்தானின் மிக முக்கிய அண்டை நாட்டவர் என்ற முறையில், ஆப்கானிஸ்தானில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதை பொறுப்புணர்வுடன் நாம் உறுதி செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தானில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் அமைய சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டும். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஆட்சியை உருவாக்க நாம் துணையாக இருக்க வேண்டும். 

ஆப்கானிஸ்தான் அரசியல் சாசனத்தின் வழியில் ஆப்கானிஸ்தான் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய ஆட்சி அமைய வேண்டும். ஆப்கானிஸ்தானின் இப்போதைய தேவை அரசியல் ரீதியான அமைதி. மக்களின் வாழ்க்கையும் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஆப்கானிஸ்தான் மீண்டும் தீவிரவாதிகள் கூடும் கூடாரமாக மாறிவிடக் கூடாது.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story