கணக்கு முடக்கப்பட்ட விவகாரம்: டுவிட்டர் நிறுவனத்துக்கு எதிராக டிரம்ப் வழக்கு


கணக்கு முடக்கப்பட்ட விவகாரம்: டுவிட்டர் நிறுவனத்துக்கு எதிராக டிரம்ப் வழக்கு
x
தினத்தந்தி 3 Oct 2021 6:05 PM GMT (Updated: 3 Oct 2021 6:05 PM GMT)

கணக்கு முடக்கப்பட்ட விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனத்துக்கு எதிராக டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவிய அப்போதைய ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி நாடாளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நாடாளுமன்ற வன்முறை தொடங்குவதற்கு முன்பும் வன்முறை நடந்து கொண்டிருந்தபோதும் டிரம்ப் சமூக வலைதளங்களில் தேர்தல் முறைகேடு தொடர்பாக பல்வேறு பதிவுகளை வெளியிட்டார்.‌இதனால் டிரம்ப் வன்முறையை தூண்டியதாக கூறி டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் டிரம்பின் அதிகாரப்பூர்வ கணக்கை முடக்கின.

இதை எதிர்த்து சமூக வலைதள நிறுவனங்கள் மீதும் அதன் தலைமை செயலதிகாரிகள் மீதும் வழக்கு தொடரப்போவதாக டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது அவர் டுவிட்டர் நிறுவனத்துக்கு எதிராக புளோரிடாவில் உள்ள தெற்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக கோர்ட்டில் அவர் தாக்க செய்த மனுவில், ‘‘டுவிட்டர், இந்த நாட்டில் அரசியல் சொற்பொழிவின் மீது அளவிட முடியாத, வரலாற்று முன்னோடியில்லாத மற்றும் வெளிப்படையான ஜனநாயக விவாதத்திற்கு மிகவும் ஆபத்தான அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டை பயன்படுத்துகிறது. எனது கணக்கை முடக்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் டுவிட்டர் கட்டாயப்படுத்தப்பட்டது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முடக்கப்பட்டுள்ள தனது கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர டுவிட்டர் நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டுமென அந்த மனுவில் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

Next Story