எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்திற்கு மெட்ரோ ரெயிலில் வந்த பிரான்ஸ் மந்திரி


எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்திற்கு மெட்ரோ ரெயிலில் வந்த பிரான்ஸ் மந்திரி
x
தினத்தந்தி 3 Oct 2021 8:11 PM GMT (Updated: 3 Oct 2021 8:11 PM GMT)

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்திற்கு நேற்று மெட்ரோ ரெயில் மூலம் பிரான்ஸ் நாட்டின் மந்திரி பிராங்க் ரீஸ்டர் வருகை புரிந்தார். அப்போது அவர் சாலை, போக்குவரத்து ஆணையத்துக்கு பாராட்டு தெரிவித்தார்.

துபாய்,

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகம் வரை மெட்ரோ ரெயில் சேவையானது விரிவுபடுத்தப்பட்டது. ‘ரூட் 2020’ என்ற இந்த புதிய வழித்தடத்தில் துபாய் ஜெபல் அலி பகுதியில் இருந்து கண்காட்சி வளாகம் வரை மெட்ரோ ரெயில்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது உலக கண்காட்சி தொடங்கியதை முன்னிட்டு பொதுமக்கள், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைவரும் மெட்ரோ ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பலரும் தங்கள் சொந்த வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இதில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் எக்ஸ்போ 2020 கண்காட்சிக்கு வளாகத்திற்கு பிரான்ஸ் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்துறை மந்திரி பிராங்க் ரீஸ்டர் அந்நாட்டின் தொழிலதிபர்கள், வர்த்தகர்களுடன் மெட்ரோ ரெயிலில் வந்தார். ஜெபல் அலி மெட்ரோ ரெயில் நிலையத்தில் அவருடன் பிரான்ஸ் நாட்டின் பிரபல கியோலிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பெர்னார்டு டாபரி உள்ளிட்ட பலர் வருகை புரிந்தனர்.

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதற்கான நோல் கார்டை பெற்றுக்கொண்ட அவர் பயணிகள் நுழையும் பகுதியில் அந்த கார்டை பஞ்ச் (உணரும் பகுதியில் வைத்தல்) செய்து அந்த நிலையத்தின் பிளாட்பார்முக்கு வந்தார். பிறகு அங்கு எக்ஸ்போ 2020 கண்காட்சிக்கு செல்லும் மெட்ரோ ரெயிலில் ஏறினார். முன்னால் உள்ள பெட்டியில் ஏறி துபாய் நகரை பார்த்தபடி சென்றார். பின்னர் கண்காட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் இறங்கி சென்றார். இது குறித்து அவர் கூறியதாவது:-

உலகளவில் நடைபெறும் இந்த மாபெரும் நிகழ்வில் பங்கேற்க துபாய் மெட்ரோ ரெயில் மூலம் பயணம் செய்து வந்தோம். 20 நிமிடங்களுக்குள் கண்காட்சி வளாகத்தை அடைந்துவிட்டோம். மிக விரைவாகவும், எளிதாகவும் கண்காட்சியை அடைய இந்த போக்குவரத்து பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

சீரான போக்குவரத்து மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் போன்றவைகளை சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த ஆணையத்தின் சேவைக்கு பாராட்டுகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பிறகு அவருடன் வந்த குழுவினர் மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Next Story