ஸ்பெயினில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்: எரிமலை சீற்றம்


ஸ்பெயினில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்: எரிமலை சீற்றம்
x
தினத்தந்தி 5 Oct 2021 12:14 AM GMT (Updated: 5 Oct 2021 12:14 AM GMT)

ஸ்பெயின் நாட்டின் தீவான லா பால்மாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால், எரிமலை குழம்பு வெளியேறுவது அதிகரித்தது.

மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டில் வடமேற்கு ஆப்பிரிக்க கடற்கரையையொட்டி அமைந்துள்ள கேனரி தீவுகளில் லா பால்மா எரிமலை அமைந்துள்ளது. சுமார் 85 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட இந்த தீவில் கடந்த 19 -ஆம் தேதி, 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து லா பால்மா எரிமலை வெடித்துச் சிதறியது.

கடந்த இரண்டு வாரங்களாக  எரிமலை குழம்பு தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்த நிலையில், லா பால்மாவில் மீண்டும்  3.0 ரிக்டர் அளவு கொண்ட இரண்டு நிலநடுக்கங்கள் நேற்று ஏற்பட்டது. இதனால் எரிமலையிலுள்ள  பள்ளத்தின் ஒரு பகுதி இடிந்தது. இதன்மூலம் அங்கு எரிமலையின் சீற்றம்  அதிகரித்து காணப்படுகிறது

இதுகுறித்து கேனரி தீவுகளின் பிராந்தியத் தலைவர் ஏங்கல் வெக்டர் டோரஸ் கூறுகையில், "எரிமலையின் சீற்றம் இன்னும் முடிவடையவில்லை. இது இன்னும் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது கூட எங்களுக்குத் தெரியாது. நாங்கள் இயற்கையின் கைகளில் இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய செயற்கைக்கோள் கண்காணிப்பு நிறுவனத்தின்படி,  எரிமலை குழம்பு இதுவரை 1000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், பெரும்பாலான வீடுகள், கிட்டத்தட்ட 34 கிலோமீட்டர் அளவிற்கு சாலைகளை அழித்ததுடன் 1,000 ஏக்கர் நிலத்தையும் அழித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.


Next Story