20 மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி அளித்த அமெரிக்கா...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 Nov 2021 12:26 AM GMT (Updated: 9 Nov 2021 12:26 AM GMT)

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளை அமெரிக்கா அனுமதிக்க தொடங்கியுள்ளது.

வாஷிங்டன், 

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. கொரோனா வைரசின் முதல் அலையின்போது அந்த நாடு கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது.

இதன் காரணமாக வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது தரை வழி எல்லைகளை மூடிய அமெரிக்கா வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா மற்றும் இதர பயணிகள் வருவதற்கும் தடை விதித்தது.

அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் விதித்த இந்த தடையை அவருக்கு பின் கடந்த ஜனவரியில் பதவிக்கு வந்த ஜோ பைடன் மேலும் நீடித்தார்.

இதனால் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த பயணத் தடை குடும்பங்களை பிரித்து, சுற்றுலாவை முடக்கியது.

இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் பலனாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு கணிசமாக சரிந்தது. இதை தொடர்ந்து ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவிக்க தொடங்கியது.

அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள விமான நிறுவனங்கள் அனைத்தும் சர்வதேச பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை நீக்குமாறு ஜோ பைடன்நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தன.

நீண்ட ஆலோசனைக்கு பிறகு, முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சர்வதேச பயணிகள் நவம்பர் மாதம் 8-ந்தேதி முதல் அமெரிக்கா வரலாம் என ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்தது.

மேலும் இது தொடர்பாக சர்வதேச பயணிகளுக்கான புதிய பயண கொள்கையையும் ஜோ பைடன் நிர்வாகம் அண்மையில் வெளியிட்டது.

அதன்படி அமெரிக்கா வரும் சர்வதேச பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனா ‘நெகடிவ்’ சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் 20 மாதங்களுக்கு பிறகு அமெரிக்கா நேற்று தனது எல்லைகளை திறந்து சர்வதேச பயணிகளை நாட்டில் நுழைய அனுமதித்தது. முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிக அளவில் படையெடுப்பார்கள் என விமான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

குறிப்பாக ஐரோப்பா மற்றும் பிற நாடுகளில் இருந்து அதிகமான பயணிகளை விமான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. மேலும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையிலான விமான போக்குவரத்து கடந்த மாதத்தை விட இந்த மாதம் 21 சதவீதம் அதிகரிக்கும் என புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story