கனடாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு


கனடாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு
x
தினத்தந்தி 17 Nov 2021 11:33 PM GMT (Updated: 17 Nov 2021 11:33 PM GMT)

கனடாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயல் மற்றும் அதனை தொடர்ந்து மழை, வெள்ளத்தால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒட்டாவா,

கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான வான்கூவர் நகரை கடந்த திங்கட்கிழமை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலை தொடர்ந்து அங்கு பேய் மழை கொட்டத் தொடங்கியது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்ததாக கூறப்படுகிறது.

இதில் இந்த ஒட்டுமொத்த பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது கொட்டிய கன மழையால் வான்கூவர் நகரில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வான்கூவர் நகரில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரெயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. கனடாவின் மற்ற பகுதிகளுடன் வான்கூவரை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் அந்த வழியாக சென்ற வாகனங்கள் பல சிக்கின. இதில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும், 2 பேர் மாயமாகி உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில் நிலச்சரிவு ஏற்பட்டபோது எத்தனை வாகனங்கள் சிக்கின என்பது இன்னும் உறுதி செய்யப்படாததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்கிற அச்சம் நிலவுகிறது.

புயல், மழை, வெள்ளத்தால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு தெரிவித்துள்ளது. மேலும் புயல், மழை, வெள்ள பாதிப்பு காரணமாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story