ஒமிக்ரான் உலகின் பல பகுதிகளுக்கு ஏற்கனவே பரவிவிட்டது - பீதியை கிளப்பும் தென் ஆப்பிரிக்கா


ஒமிக்ரான் உலகின் பல பகுதிகளுக்கு ஏற்கனவே பரவிவிட்டது - பீதியை கிளப்பும் தென் ஆப்பிரிக்கா
x
தினத்தந்தி 29 Nov 2021 6:54 AM GMT (Updated: 29 Nov 2021 7:05 AM GMT)

ஒமிக்ரான் வைரஸ் ஏற்கனவே உலகின் பல பகுதிகளுக்கு பரவிவிட்டதாக தென் ஆப்பிரிக்க சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

ஜொகனஸ்பர்க்,

50 பிறழ்வுகளைக் கொண்டுள்ள கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் தென்னாப்பிரிக்கா உள்பட ஆப்பிரிக்க நாடுகளுடனான விமானப்போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.  

வேகமாகப்பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா மற்றும் பிற வகை கொரோனா வைரசுடன் ஒப்பிடும் போது இந்த ஒமிக்ரான் வைரஸ் அதிக வேகமாக பரவும் அல்லது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்ய இதுவரை எந்தவித தரவுகளும் இல்லை. ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தங்கள் நாடு மீது பிற உலக நாடுகள் பயணகட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்கு தென் ஆப்பிரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க சுகாதாரத்துறை மந்திரி கூறுகையில், தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எதிர்பாராத ஒன்று மற்றும் நமது பொருளாதாரத்தையும் இது பாதிக்கும். 

எங்கள் நாடு மீது கட்டுப்பாடுகள் விதித்துள்ள நாடுகள் அறிவியலை பின்பற்றி அவர்களது முடிவுகளை மறு ஆய்வு செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒமிக்ரான் வைரஸ் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்கனவே பரவிவிட்டது’ என்றார்.

Next Story