‘எல்லையில் வேலி போட பாகிஸ்தானை அனுமதிக்க முடியாது’- தலீபான்கள்


‘எல்லையில் வேலி போட பாகிஸ்தானை அனுமதிக்க முடியாது’- தலீபான்கள்
x
தினத்தந்தி 6 Jan 2022 6:57 PM GMT (Updated: 6 Jan 2022 6:57 PM GMT)

எல்லையில் வேலி போட பாகிஸ்தானை அனுமதிக்க முடியாது என்று தலீபான் படை தளபதி கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே 2,670 கி.மீ. நீளம் சர்வதேச எல்லை உள்ளது. இதில் இருநாடுகள் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த மாதம் பாகிஸ்தான் படையினர் நிம்ரோஸ் மாகாணத்தில் முள்வேலிகளை விரிவுபடுத்த முயற்சித்தனர். இதை தலீபான் படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். நங்கர்ஹார் மாகாணத்தில் இதே போன்று பாகிஸ்தான் படை வீரர்கள் முள்வேலி அமைக்க முயன்றபோதும் பிரச்சினை ஏற்பட்டது.

இது பற்றி பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் கருத்து தெரிவிக்கையில், “சில விஷமிகள் தேவையில்லாமல் பிரச்சினை எழுப்புகிறார்கள். நாங்கள் அதை கவனித்து வருகிறோம். நாங்கள் ஆப்கானிஸ்தான் அரசுடன் தொடர்பில் உள்ளோம்” என கூறினார்.

இதற்கு ஆப்கானிஸ்தான் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தலீபான் படை தளபதி சனவுல்லா சாங்கின் கூறும்போது, “நாங்கள் எந்த நேரத்திலும் எந்த வடிவத்திலும் வேலி அமைப்பதை அனுமதிக்க மாட்டோம். இனி எந்த வேலியும் அமைக்கக்கூடாது” என தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் குரல் கொடுத்து வந்த நிலையில் இப்போது அவர்களுக்கு இடையே மோதல் போக்கு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story