இஸ்ரேலுடனான போரை விரும்பவில்லை - லெபனான் அமைச்சர்


இஸ்ரேலுடனான போரை விரும்பவில்லை - லெபனான் அமைச்சர்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 23 Oct 2023 5:17 PM GMT (Updated: 23 Oct 2023 5:44 PM GMT)

இஸ்ரேலுடனான போரை விரும்பவில்லை என்று லெபனான் அமைச்சர் ஜியாத் மக்காரி தெரிவித்துள்ளார்.

பெய்ரூட்,

இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 17வது நாளாக நீடித்து வருகிறது.

முன்னதாக இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதனிடையே லெபனானில் இருந்தும் ஹமாஸ் படைகள் தாக்குதல் நடத்தி சம்பவம் இஸ்ரேலுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இஸ்ரேலின் வடக்கு பகுதியில் லெபனானும், தெற்கு பகுதியில் காசாவும் உள்ளன. இதனைத்தொடர்ந்து லெபனான் மீதும் இஸ்ரேல் படைகள் தாக்குதலை தொடுத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தனது நாடு இஸ்ரேலுடன் ஆயுத மோதலில் ஈடுபட விரும்பவில்லை என்று லெபனான் அமைச்சர் ஜியாத் மக்காரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "இஸ்ரேலுடனான லெபனான் போரை எங்கள் நாடு விரும்பவில்லை. எங்கள் நாட்டை கற்காலத்திற்கு திரும்ப செய்வதற்கான பணியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக நெதன்யாகு போரை விரும்புகிறார்" என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டியை சந்தித்து, இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் இருந்து விலகி இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story