உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள், வீரர்களுக்கு பயிற்சி; பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்


உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள், வீரர்களுக்கு பயிற்சி; பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்
x
தினத்தந்தி 17 Feb 2024 5:25 PM GMT (Updated: 17 Feb 2024 5:29 PM GMT)

உக்ரைன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அதிபர்களான முறையே ஜெலன்ஸ்கி மற்றும் மேக்ரான் இருவரும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டனர்.

கீவ்,

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது, இரண்டாண்டுகளை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த போரின் தொடக்கத்தில், உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், உக்ரைன் அரசு பதிலடி தாக்குதல் நடத்தி அவற்றை மீட்டுள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதற்காக ராணுவ மற்றும் நிதியுதவிகளை அளித்து வருகின்றன. ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடை விதித்து, சொத்துகளை முடக்கியும் வருகின்றன.

எனினும், போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சூழலில், நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு ஏற்ப ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து வெளிப்படையான ஆதரவை வழங்கி வருகின்றன. இதன்படி, உக்ரைனுடன் புதிய நீண்டகால பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றுக்கு பிரான்ஸ் இன்று ஒப்புதல் அளித்து உள்ளது.

இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, உக்ரைன் நாட்டுக்கு போரிட தேவையான கூடுதல் ஆயுதங்களை வழங்குவது, வீரர்களுக்கு உக்ரைனில் பயிற்சி அளிப்பது மற்றும் ரூ.26,805 கோடி மதிப்பிலான ராணுவ உதவியை அனுப்பி வைப்பது உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன என்று அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஒப்பந்தம் 10 ஆண்டுகள் நீடிக்கும். ராணுவ துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், வருங்காலத்தில், ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கான வழியையும் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தும்.

இதனை உக்ரைன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அதிபர்களான முறையே ஜெலன்ஸ்கி மற்றும் மேக்ரான் இருவரும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டனர்.

இதற்கு முன் இதேபோன்ற ஒப்பந்தம் ஒன்றை ஜெர்மனியுடன் உக்ரைன் ஏற்படுத்தியது. இதன்படி, ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ஜெலன்ஸ்கி மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்ஸ் இடையே, 10 ஆண்டுகாலம் நீடிக்க கூடிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என தெரிவித்தது.

இதனால், உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்குவதுடன், ரஷியாவுக்கு தடை விதிப்பது மற்றும் ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதிப்பது, ரஷியாவின் சொத்துகள் தொடர்ந்து முடக்கப்படுவது உறுதி செய்யப்படுதல் ஆகியவற்றை ஜெர்மனி மேற்கொள்ளும்.


Next Story