24 மணி நேரத்திற்குள் 4 ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா..! தென் கொரியா தகவல்


24 மணி நேரத்திற்குள் 4 ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா..! தென் கொரியா தகவல்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 1 Jan 2023 1:28 AM GMT (Updated: 1 Jan 2023 1:32 AM GMT)

வடகொரியா இன்று அதிகாலை 2:50 மணியளவில் மேலும் ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

சியோல்,

வடகொரியா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களை கொண்டு பிராந்திய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை நீண்டகாலமாக அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. ஒரே நாளில் 3 ஏவுகணைகளை சோதித்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அதிர வைத்தது.

அவை 350 கி.மீ. தூரத்துக்கு பறந்து சென்று, கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடல் பகுதியில் விழுந்தன. முதற்கட்ட மதிப்பாய்வின் அடிப்படையில் 3 ஏவுகணைகளும் தென்கொரியாவை இலக்காகக் கொண்டு சோதிக்கப்பட்டதாக தெரிய வந்திருப்பதாக தென்கொரியா கூட்டுப்படைகளின் தலைமை தெரிவித்தது.

இதனை தொடர்ந்து ஆங்கில வருடப்பிறப்பான இன்றும் பியாங்யாங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:50 மணியளவில் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுப் படை தெரிவித்து உள்ளது.

வட கொரியா தனது ஆயுத சக்தியை நவீனப்படுத்தவும், எதிர்காலத்தில் அமெரிக்காவை விட தனது செல்வாக்கை அதிகரிக்கவும் முயற்சிப்பதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, 2017-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வடகொரியா தென்கொரியாவுக்குள் 5 டிரோன்களை அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பதிலுக்கு தென் கொரியாவும் 3 ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டதாக தெவித்து இருந்தது.

வட கொரியாவின் அணு ஆயுதங்களைக் கண்டு தென் கொரியா பயப்படக் கூடாது என்றும், வட கொரியாவின் எந்தவொரு ஆத்திரமூட்டலுக்கும் தென் கொரியா உறுதியுடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story