ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ..!!


ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ..!!
x

கோப்புப்படம்

வடகொரியா ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

சியோல்,

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடைசியாக கடந்த மாதம் 19-ந் தேதி அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய 'ஹவாசோங்-17' என்கிற ஐசிபிஎம் ஏவுகணையை வடகொரியா சோதித்தது. அதன் பிறகு எந்தவொரு ஏவுகணை சோதனையையும் வடகொரியா நடத்தவில்லை.

இந்த நிலையில் வடகொரியா நேற்று ஒரே நாளில் கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்தது. சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் வடகொரியா அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை ஏவி சோதித்ததாகவும், அந்த ஏவுகணைகள் கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடையில் கடலில் விழுந்ததாகவும் தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து ஜப்பான் துணை ராணுவ மந்திரி தோஷிரோ கூறுகையில், "வடகொரியாவின் ஏவுகணைகள் 550 கிமீ உயரத்தில் 250 கிமீ தூரம் வரை பறந்ததாகவும், அவை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாகவும் தெரிகிறது. ஏவுகணைகளால் சேதம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை" என கூறினார். ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியிருப்பதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.


Next Story