பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு பிடிவாரண்டு


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு பிடிவாரண்டு
x

கோப்புப்படம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராகவும், முன்கூட்டியே தேர்தலை நடத்த வலியுறுத்தியும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

ஆனால் அதனை அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் மறுத்து வருவதால் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜா மீது இ்ம்ரான்கான் மற்றும் அவரது கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற பொதுக்கூடங்களில் பேசிய இம்ரான்கான் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர்கள் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் பாகுபாடான கொள்கையை கொண்டிருப்பதாகவும், பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து, இம்ரான்கான் மற்றும் அவரது நெருங்கிய ஆலோசகர்களான பவாத் சவுத்ரி மற்றும் ஆசாத் உமர் மீது தேர்தல் ஆணையம் அவதூறு வழக்கு பதிவு செய்தது. அதனை தொடர்ந்து விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி இம்ரான்கான் உள்ளிட்ட 3 பேருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தேர்தல் ஆணையத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி இம்ரான்கான் உள்ளிட்ட 3 பேரின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை தள்ளூபடி செய்த தேர்தல் ஆணையம் 3 பேரையும் கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.


Next Story