2013ம் ஆண்டு இந்தியரை கொன்ற பாகிஸ்தான் நிழல் உலக தாதா மர்ம நபர்களால் சுட்டுக்கொலை


2013ம் ஆண்டு இந்தியரை கொன்ற பாகிஸ்தான் நிழல் உலக தாதா மர்ம நபர்களால் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 14 April 2024 4:18 PM GMT (Updated: 14 April 2024 4:21 PM GMT)

2013ம் ஆண்டு இந்தியரை கொன்ற பாகிஸ்தான் நிகழ் உலக தாதா இன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

லாகூர்,

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் சரப்ஜித் சிங். இவர் கடந்த 1990ம் ஆண்டு பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது அந்நாட்டு படையினரால் கைது செய்யப்பட்டதாக சரப்ஜித் சிங்கின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பில் சரப்ஜித் சிங் முக்கிய குற்றவாளி என்றும் அவர் உளவு வேலையில் ஈடுபட்டதாகவும் அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டியது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட சரப்ஜித் சிங்கிற்கு பாகிஸ்தான் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. ஆனால், சரப்ஜித் சிங் நிரபராதி எனவும் அவரை உடனடியாக விடுதலை செய்யும்படி இந்தியா பல முறை பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான் சரப்ஜித் சிங்கை லாகூரில் உள்ள கோட் லக்பட் சிறையில் அடைத்தது. அவர் 23 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் இருந்தார்.

அதேவேளை, கடந்த 2001ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அப்சல் குருவை இந்தியா 2013ம் ஆண்டு மே மாதம் தூக்கிலிட்டது.

அப்சல் குருவை இந்தியா தூக்கிலிட்ட சில நாட்களில் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர் சரப்ஜித் சிங் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். சரப்ஜித் சிங் மீது தாக்குதல் நடத்தியவர்கள் முக்கியமானவர் அமீர் சர்ப்ராஸ் என்கிற தம்பா. இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை தொடங்கிய பயங்கரவாதி ஹபீஸ் சயதுவின் நெருங்கிய கூட்டாளியாவார். அமீர் சர்ப்ராஸ் பாகிஸ்தான் நிழல் உலக தாதாவாகவும் வளம் வந்தார்.

சக கைதிகளுடன் சேர்ந்து சரப்ஜித் சிங் மீது அமீர் சர்ப்ராஸ் கொடூர தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சரப்ஜித் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேவேளை, சரப்ஜித் சிங் கொலையில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் நிழல் உலக தாதா அமீர் சர்ப்ராசுக்கு எதிராக போதிய ஆதரம் இல்லை என கூறி அவரை அந்நாட்டு கோர்ட்டு 2018ம் ஆண்டு விடுதலை செய்தது. விடுதலையான அமீர் சர்ப்ராஸ் கடந்த சில ஆண்டுகளாக லாகூரின் இஸ்லாம்புரா பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில், இந்தியர் சரப்ஜித் சிங் கொலையில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் நிழல் உலக தாதா அமீர் சர்ப்ராஸ் இன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். லாகூரின் இஸ்லாம்புராவில் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த அமீர் சர்ப்ராசை பைக்கில் வந்த 2 பேர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த அமீரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமீர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

இந்த தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அமீரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் சமீபநாட்களாக மர்மநபர்களால் சுட்டுகொல்லப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இந்தியர் சரப்ஜித் சிங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அமீர் சர்ப்ராஸ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story