லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி ஏவுகணை தாக்குதலில் பலி


லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி   ஏவுகணை தாக்குதலில் பலி
x
தினத்தந்தி 5 July 2022 11:36 PM GMT (Updated: 6 July 2022 12:30 PM GMT)

உக்ரைன் - ரஷியா இடையே இன்று 133-வது நாளாக போர் நீடித்து வருகிறது.




Live Updates

  • உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி தலிதா டோ வாலே, ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்.
    6 July 2022 12:30 PM GMT

    உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி தலிதா டோ வாலே, ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

    துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற 39 வயதான அவர் கார்கிவ் நகரில் பதுங்கு குழியில் இருந்தபோது ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதுதலிதாவைக் கண்டுபிடிக்க சென்ற முன்னாள் பிரேசில் ராணுவ வீரர் டக்ளஸ் புரிகோவும் கொல்லப்பட்டார்.

    ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ்க்கு எதிராக போரிட்டு அதனை தனது யூடியூப் சேனலில் ஆவணப்படுத்திய தலிதா டோ வாலே, கடந்த 3 வாரங்களாக ரஷியா - உக்ரைன் போர் தொடர்பாகவும் வீடியோ வெளியிட்டு வந்தார். 

  • 6 July 2022 8:30 AM GMT


    கெர்சன் பிராந்தியத்தில் இருந்து பசுமை ஆற்றலை ரஷியா திருடப் போவதாக பிராந்திய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ரஷிய ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கெர்சன் பிராந்தியத்தில் உள்ள உக்ரைனின் காற்றாலைகளை ரஷிய ஆக்கிரமிப்பு கிரிமியாவுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

  • 6 July 2022 8:03 AM GMT


    உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷியப் படைகள் 5 பேரைக் கொன்றதாக அம்மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் கவர்னர் பாவ்லோ கைரிலென்கோவின் கூறுகையில், ரஷிய ராணுவம் அவ்திவ்காவில் இரண்டு பேரையும், ஸ்லோவியன்ஸ்கில் ஒருவரையும், கிராஸ்னோரிவ்காவில் ஒருவரையும், குராகோவோவில் ஒருவரையும் கொன்றது. மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்” என்று அவர் கூறினார். 

  • 6 July 2022 6:52 AM GMT


    ரஷியாவின் போரில் குறைந்தது 346 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 645 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் உக்ரைனின் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மேலும் ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் போர் நடந்து கொண்டிருக்கும் பகுதிகளில் உயிரிழப்புகள் சரிவர கணக்கிடப்படாததால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

  • 6 July 2022 5:50 AM GMT


    ரஷிய ராணுவம் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தை இன்று தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

    இதுதொடராக டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் ஒப்லாஸ்ட் கவர்னர் விலாண்டைன் ரெஸ்னிசன்கோ கூறுகையில், “கிவொர்சியி மாவட்டத்தில் ஒரே இரவில் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் செஸ்டிர்னியா கிராமத்தில், ஒரு சில குடியிருப்பு கட்டிடங்கள் குண்டுவீச்சில் சேதமடைந்தன. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை” என்று தெரிவித்தார்.

  • 6 July 2022 4:44 AM GMT


    தெற்கு உக்ரைனில் 18 ரஷிய வீரர்களை உக்ரைன் ராணுவம் தோற்கடித்துள்ளதாக தகவல்

    இதுதொடர்பாக உக்ரைனின் "தெற்கு" செயல்பாட்டுக் கட்டளை கூறுகையில், ஒரு ரஷிய Msta-B ஹோவிட்சர், ஒரு ZU-23 விமான எதிர்ப்பு துப்பாக்கி, இரண்டு சுயமாக இயக்கப்படும் மோட்டார் அமைப்புகள், இரண்டு வெடிமருந்து கிடங்குகள் மற்றும் ஐந்து கவச மற்றும் இராணுவ வாகனங்களை உக்ரைன் ராணுவம் அழித்தது என்று தெரிவித்துள்ளது. 

  • 6 July 2022 3:44 AM GMT


    கார்கிவ் மாகாணத்தில் ரஷியாவின் குண்டுவீச்சு தாக்குதலில் 2 பொதுமக்கள் காயமடைந்தனர்.

    ரஷியப் படைகள் பெச்செனிஹி கிராமத்தின் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஒரு குழந்தை மற்றும் 64 வயதான நபர் ஒருவர் காயமடைந்ததாகவும், இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்களும் சேதமடைந்ததாகவும் கார்கிவ் ஒப்லாஸ்ட் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

  • 6 July 2022 2:32 AM GMT


    உக்ரைன் போர்: ரஷிய படை தாக்குதலில் பிரான்ஸ் வீரர் பலி

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 4 மாதங்களை கடந்து நீடித்துக்கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்களை ரஷிய படைகள் ஆக்கிரமித்துவிட்டன. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து ரஷிய படைகளை எதிர்த்து உறுதியுடன் சண்டையிட்டு வருகின்றனர்.

    இந்த போரில் உக்ரைன் வீரர்களுக்கு ஆதரவாக அந்த நாட்டு மக்களும், அங்கு வாழும் வெளிநாட்டவர்களும் கையில் ஆயுதங்களை ஏந்தி ரஷிய படைகளை எதிர்த்து வருகின்றனர்.

    அந்த வகையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் உக்ரைன் வீரர்களுடன் கைகோர்த்து போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் நகரில் கடந்த வாரம் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைன் வீரர்களுடன் பணியில் இருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 20 வயது வாலிபர் படுகாயம் அடைந்தார். அதை தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இவர் உக்ரைனில் ரஷிய படைகளின் தாக்குதலில் உயிரிழந்த 2-வது பிரான்ஸ் வீரர் ஆவார்.

  • 6 July 2022 1:30 AM GMT


    உக்ரைனின் ஒவ்வொரு பகுதியிலும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • 5 July 2022 11:36 PM GMT

    கீவ்,

    உக்ரைன் மீது ரஷியா 133-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இதனிடையே, உக்ரைனின் லூகன்ஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான லிசிசண்ஸ்க் நகரையும் ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த நகரங்களிம் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த பகுதியான டோனெட்க்ஸ் மாகாணத்தில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைவதாலும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி டொனேட்ஸ்க் மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.


Next Story