ஆன்மிகம்

சொல்லும் செயலும் + "||" + Words and actions

சொல்லும் செயலும்

சொல்லும் செயலும்
நற்செய்தியாளர் புனித லூக்கா எழுதிய நற்செய்தியை உற்றுக் கவனிப்போம். உணர்வோடு படிப்போம். சிந்திக்க முற்படுவோம். இயேசு பெருமானின் போதனை மாண்பை ஏற்று நெறியுடன் வாழ்வோம்.
நற்செய்தி சிந்தனை

- செம்பை சேவியர்நற்செய்தியாளர் புனித லூக்கா எழுதிய நற்செய்தியை உற்றுக் கவனிப்போம். உணர்வோடு படிப்போம். சிந்திக்க முற்படுவோம். இயேசு பெருமானின் போதனை மாண்பை ஏற்று நெறியுடன் வாழ்வோம்.

ஓய்வு நாளன்று இயேசு பெருமான் தொழுகைக் கூடம் ஒன்றில் போதித்துக் கொண்டிருந்தார். கடந்த பதினெட்டு வருடங்களாகத் தீய ஆவி பிடித்து, உடல் நலம் குறைந்த பெண் ஒருவரும் அங்கு இருந்து போதனையைக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்பெண் கொஞ்சம்கூட நிமிர முடியாதவாறு, ‘கூன்’ விழுந்த நிலையில் காணப்பட்டார்.


இயேசு பெருமான், அவரை அருகே அழைத்து, “அம்மா! உம்முடைய நோயில் இருந்து, நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்” என்று கூறி, தம்முடைய கைகளை அவருடைய தலையில் வைத்தார்.

உடனே அந்தப் பெண்ணானவள் நிமிர்ந்து நோக்கினார். இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்.

இயேசு பிரான், ஓய்வு நாளன்று குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர், மிகுந்த சினம் கொண்டு, மக்கள் கூட்டத்தினரை நோக்கினார். மக்களைப் பார்த்து, “வேலை செய்வதற்கு ஆறு நாட்கள் உண்டே! அந்த நாட்களில் வந்து குணம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.

இயேசு பிரானோ, அந்தத் தொழுகைக் கூடத் தலைவரைப் பார்த்து, “வெளிவேடக்காரரே! நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வு நாளில் தம்முடைய மாட்டையோ, கழுதையையோ, தொழுவத்தில் இருந்து அவிழ்த்துக் கொண்டு போய் தண்ணீர் காட்டுவதில்லையோ?”

“ஆபிரகாமின் மகளாகிய இவரை, பதினெட்டு வருடங்களாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான். இந்தக் கட்டில் இருந்து இவரை ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையா?” என்று கேட்டார்.

இயேசு இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கமடைந்தனர். திரண்டிருந்த மக்கள் கூட்டம், அவர் செய்த மாண்புக்குரிய பெரிய செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நற்செய்தியில் இருந்து நாம் உணர வேண்டிய கருத்து என்ன?

நல்ல செயல்களை எந்த நாளிலும் செய்யலாம். அதற்கு ஏது காலமும் நேரமும்?. பழைய சட்டங்களை வைத்துப் பேசுகிறார், தொழுகைக்கூடத் தலைவர். சாத்தானின் கட்டிலிருந்து பெறப்படும் விடுதலை பற்றிப் பேசி செயல்படுகிறார், இயேசு பிரான். இதுதான் வேறுபாடு. சாத்தானால் சிறைப்பட்ட ஒருவரை விடுதலையாக்கித், தன் அன்பை வெளிப்படுத்துகிறார் இயேசு பிரான்.

எல்லோருடைய உள்ளங்களையும் அறிந்தவராக இருப்பவர் இயேசு பிரான் என்பதால், எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், மக்களைப் பார்த்து அறிக்கை விட்ட தொழுகைக் கூடத்தலைவரை நோக்கி, ‘வெளி வேடக்காரரே!’ என்று அழைக்கின்றார். அவர் மட்டுமா வெளிவேடக்காரர்? இப்படியெல்லாம் பேசுகிறவர்கள் அனைவருமே, வெளி வேடக்காரர்கள்தான். இவ்வுலகில் எம்மறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எத்துறையைத் தேர்ந்தெடுத்து வாழ்பவராக இருந்தாலும், சிலரைத் தவிர, பெரும்பான்மை யினர் வெளிவேடக்காரர்களாகத்தான் இருக்கின்றனர். வெளிவேடக்காரத் தன்மையில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதையே இயேசு பெருமகனார் விரும்புகிறார்.

இப்படி அவர், தொழுகைக் கூடத் தலைவரை அழைத்து விட்டு, ஒரு வினாவைத் தொடுக்கிறார். இந்த வினா சாதாரணமானதல்ல. அவர்களை சார்ந்த வினாவாகவே இருக்கிறது.

“நீங்கள் ஒவ்வொருவரும், ஓய்வு நாளில், தம்முடைய மாட்டையோ, கழுதையையோ தொழுவத்தில் இருந்து, அவிழ்த்துக் கொண்டு போய், தண்ணீர் காட்டுவதில்லையோ” என்று கேட்கிறார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் எப்படிப்பட்ட கடின உள்ளம் கொண்டவர்களாக இருந் திருக்க முடியும்? உளியைக் கொண்டு கற்களைச் செதுக்கி உருவம் சமைப்பதுபோல, கடின உள்ளங்களை, ‘சொல்’ எனும் உளியால் செதுக்கி, சிந்திக்கத் தூண்டுகிறார்.

அவர்கள் வாழும் இடம், அவர்களோடு வாழும், மாடு, கழுதை போன்றவைகளை எடுத்துக் காட்டி, அவர்களுக்குப் புரியும் மொழியில் பேசி, அவர்களை நெறிப்படுத்துகிறார்.

பதினெட்டு ஆண்டுகள் சாத்தானால் கட்டப்பட்டிருந்த அப்பெண்ணை ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையோ? என்றொரு கேள்வியைத் தொடுக்கிறார்.

தொழுவத்தில் இருந்து அவிழ்த்துக் கொண்டு போனதோ, ஐந்தறிவு உயிர். பதினெட்டு ஆண்டுகள் கட்டுக்குள் சாத்தான் வைத்திருந்தது, ஆறறிவு உயிர். இருந்தாலும் இயேசு பெருமானைப் பொறுத்தவரை, ஓரறிவு உயிர் முதல் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியவைதான். நீங்கள் தண்ணீருக்காக அழைத்துச் செல்கிறீர்கள். நான் கண்ணீரைத் துடைக்கிறேன். இப்படியெல்லாம் பேசி கடின உள்ளங்களை மாற்றி சிந்திக்கத் தூண்டுகிறார்.

உடனே வந்த எதிர் வினையை எண்ணிப் பார்ப்போம். அவரை எதிர்த்தவர்கள் அனைவரும் வெட்கம் அடைந்தனர். ஏனென்றால் போதகரின் கேள்வி, அவர்களின் மனதைச் சுண்டி இழுத்து விடுகிறது. கேள்வி இயல்பாகவும், அவர் களுக்குப் புரியும்படியும் இருக்கிறது. ஆகவே தங்கள் மூதாதையரின் எண்ணங்களுக்காக வெட்கப்படுகின்றனர். அங்கு திரண்டிருந்த கூட்டம், அவர் செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைகின்றது.

சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால், எவரும் மதிப்பர்.

‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்’ என்பது வள்ளலாரின் கூற்று.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ளொன்று வைத்து, புறம் ஒன்று பேச அறியாதவராய், உண்மைக்கும் சமாதானத்துக்கும் சாட்சி பகர வந்தவராய், இவ்வுலகில் முப்பத்தி மூன்று ஆண்டுகள் வாழ்ந்தவர்தான் இயேசு பெருமகனார். மனிதர்கள் நெறியோடு வாழ்வதற்கு, அவர் விதைத்த விதைகளாம் நற்செய்தியில் இதுவும் ஒன்றாக அமைகிறது.

வெறும் பழைய சட்டதிட்டங்கள் ஏற்புடையதல்ல; புதிய ஏற்பாட்டை உருவாக்க இவ்வுலகில் உதித்தவர்தான் இயேசு பிரான். அன்பு, சமாதானம், விடுதலை இவை மூன்றும், இயேசு பெருமகனார், நமக்களித்த அருட்கொடைகள் என்பதை, இந்நற்செய்தியைப் படிப்போர் உணர வேண்டும்.

ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், நம் மனித வாழ்க்கை எப்படி இருக்கிறது? எப்படி வாழ்கிறோம்? என்பதையெல்லாம் சிந்தித்து செயல்பட, இந்நற்செய்தி உதவட்டும். வாழ்வோம்; நெறியோடு வாழ்வோம்.

-தொடரும்