பக்தியை பாதுகாக்கும் வைராக்கியம்


பக்தியை பாதுகாக்கும் வைராக்கியம்
x
தினத்தந்தி 30 March 2018 12:15 AM GMT (Updated: 29 March 2018 7:29 AM GMT)

உலகத்தில் இயல்பாக கிடைக்க வேண்டிய நன்மைகளை பெறுவதற்கே மிகுந்த போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியதுள்ளது.

உலகத்தில் இயல்பாக கிடைக்க வேண்டிய நன்மைகளை பெறுவதற்கே மிகுந்த போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. அவற்றைப் பெறுவதில், நேர்மையானவர்கள் நியாயமான வழிகளை சிந்திப்பார்கள். மற்றவர்கள் குறுக்கு வழிபற்றி ஆராய்வார்கள். ஆனால் இந்த இரண்டு வழியிலுமே போராட்டம் உண்டு.

இவற்றை ஒப்பிட்டால், நேர்மையான வழியில் நின்று போராடுபவனுக்கே அதிக கஷ்டம் உண்டு. அவன் இறுதிவரை பொறுமையுடன் இருந்தாக வேண்டும். ஆனால் அதன் பிரதிபலனாக எதிர்காலத்தில் அவனோடு அவனது (பக்தன், பக்தியற்றவன், இறைமறுப்பாளன் உள்ளிட்டோரின்) வாரிசுகளும் சமாதானத்தை இறைவன் அளிக்கிறார்.

நேர்மையில் நீடிப்பதில் இரண்டு வகைகள் உள்ளன. முடிந்த வரை நேர்மையைக் கடைப்பிடிப்பது என்பது ஒரு வகை; இழப்பாக எது நேர்ந்தாலும் நேர்மையை விட்டுத் தராத நிலை மற்றொரு வகை. பெரிய அளவில் இழப்புகள் வரக்கூடும் என்றாலும், நேர்மையை விட்டுவிடாமல் ஒருவனால் அதில் நீடிக்க முடியும் என்றால் அது உண்மையான கிறிஸ்தவனால்தான் முடியும்.

ஏனென்றால், அதில் அவனுக்கு ஒரு முன்னுதாரணம் உள்ளது. கடுமையாக அடிகள்பட்டு சிலுவையில் குற்றுயிராய் தொங்கிச் சாக வேண்டும் என்ற தனக்கான இறைசித்தத்தை விட்டுவிலகாமல், அதில் பக்திக்கான நேர்மையைக் கடைப்பிடித்து, அதற்காக உயிரையே இழந்தவர் இயேசு.

எனவே, அவரது வழியை பிசகாமல் பின்பற்றுபவனும், உயிர் உட்பட எந்த இழப்புகளுக்கு அஞ்சாமல், இறைவனுக்காக இறுதிவரை நேர்மையை பின்பற்றவே விரும்புவான். இயேசுவுக்குப் பின்னரும், பக்திக்கடுத்த நேர்மைக்காக அவரது சீடர்கள், பக்தர்கள் பலர் உயிரிழந்து இன்றும் சாட்சிகளாக உள்ளனர்.

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது முடிந்த காரியங்களில் நேர்மையாகவும், முடியாதவற்றில் சூழ்நிலைக்கு ஏற்பவும் செயல்படுவது அல்ல. அரசின் அதிகார நெருக்கடி, தெரிந்தவர்கள் முன்னிலையில் அடிகள், உடனிருந்தவர்கள் கைவிடுதல், கேலிப்பேச்சுகள், அவமானம், செய்யாத குற்றத்துக்கு உச்சபட்ச தண்டனை போன்ற எத்தனையோ நெருக்கடிகளை சகித்துத்தான் பக்திக்கான நேர்மையை இயேசு கடைப்பிடித்தார்.

இது மற்ற பக்தர்களால் முடியுமா? பக்திக்கான நேர்மையை காப்பாற்றுவதற்கு இவ்வளவு வைராக்கியத்தை காட்ட வேண்டுமா? இதனால் உலக வாழ்க்கையை இயேசுபோல இழக்க நேரிடுமா? இந்த வைராக்கியம் தானாகக் கிடைக்குமா? என்பதுபோன்ற கேள்விகள் எழுகின்றன.

சரீர பாவங்கள், உள்ளத்தில் இருந்து சிந்தனையாக வரும் பாவங்கள், பிறவிக் குணங்களின்படி செய்யும் பாவங்கள் (ஜென்ம சுபாவங்கள்) ஆகியவற்றை செய்யமாட்டேன் என்று உறுதியாக முடிவு செய்து, மனம் திருந்தியவன்தான் தகுதி (பக்தி) உள்ள கிறிஸ்தவன். இவன்தான் எந்த நெருக்கடியிலும் கிறிஸ்து காட்டிய பாதையைவிட்டு விலகமாட்டான்.

பாவநெருக்கடியிலும் அதில் விழாமல் வைராக்கியம் காட்டும் பக்தனுக்கே பக்திக்கடுத்த நேர்மையை கடைப்பிடிப்பதில் இறைவன் வைராக்கியம் பெறச் செய்கிறார். அந்த வைராக்கியத்தினால் உயிர்போகும் என்றாலும், அதுதான் அவனுக்கு உச்சபட்ச மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்து தரப்பினரையும் நடுங்கச் செய்யும் மரணமே உன் கூர் எங்கே? என்று அதை தைரியமாக எதிர்கொள்வான்.

பக்தி வைராக்கியத்தின் அடிப்படையில்தான் அவன் உலக வாழ்க்கையை மேற்கொள்வானே தவிர, உலக இயல்பு குணங்களான பகை, பொய், வெறுப்பு, இச்சை போன்ற இயல்பான தன்மைகளை நாடமாட்டான்.

உதாரணமாக, லஞ்சம் மூலம் பெறும் காரியங்களை நோக்கிச் செல்லமாட்டான். பொய் சொல்லி நிவாரணம் பெறமாட்டான். எனவே மற்றவர்களைப்போல இவனுக்கு பல உலக நன்மைகள் கிடைத்திருக்காது. ஆனாலும் இறைவனால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சமாதான வாழ்க்கை அவனுக்கும் அவனது பிற்கால சந்ததிக்கும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

வாரிசுகளுக்கு பக்தன் வைத்துச் செல்லும் ஆசீர்வாதம் இதுதான். ஆனாலும் மற்றவர்கள் கூறும் ஆசீர்வாதம் நம்மை அடைய வேண்டும் என்றால், அதற்கான பக்தி என்ற தகுதியை நாம் பெற்றிருக்க வேண்டும். காரணமில்லாமல் இட்ட சாபம் தங்காது என்று வேதம் கூறுவதுபோல, பிறரால் அருளப்படும் ஆசீர்வாதங்களும், நம்மிடம் தகுதியில்லாவிட்டால் தங்காது.

ஆனால், உலகம் நிர்ணயித்தபடி எல்லாம் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு, ஆசீர்வாதமும் வந்து சேர்வதற்கு ஆசைப்படும் மக்களாக பலர் காணப்படுகின்றனர். இவர்களை ஆசீர்வதித்து திருப்திப்படுத்தும் பல போதனைகளும் உலவிக்கொண்டிருக்கின்றன.

இந்த போதனைகளிலும், அதற்கானவர்களிடத்திலும் சிக்கிவிடாமல், எப்போதும் நல்லதைச் செய்யும் வைராக்கியம் நம்மிடம் உள்ளதா என்பதை வசனத்தின் அடிப்படையில் ஆராய்ந்து பாருங்கள் (கலா.4:18). அந்த வைராக்கியம் இல்லாவிட்டால் நிலைத்த பக்தியையும், ஆசீர்வாதங்களையும் பெறக்கூடிய தகுதியையும் பெறவில்லை என்று அர்த்தம்.

கிறிஸ்தவ பக்தி வாழ்க்கை எளிதானதல்ல. எல்லா நெருக்கடியிலும் பக்திக்கான நல்லதை மட்டுமே செய்யும் வைராக்கியம் இல்லாவிட்டால், மற்றவர்களைவிட எந்தவிதத்திலும் நாம் வித்தியாசம் ஆனவர்கள் அல்ல. பக்தியை அடைந்தவர்கள், அதை எதற்காகவும் விட்டுவிடாத வைராக்கியத்தை பெற்றாக வேண்டும்.

Next Story