சமூகப்பொறுப்புணர்வு அவசியம்


சமூகப்பொறுப்புணர்வு அவசியம்
x
தினத்தந்தி 20 July 2018 1:00 AM GMT (Updated: 19 July 2018 10:10 AM GMT)

சாலைகளில் அங்கிங்கெனாதபடி எங்கு நோக்கினும் எரிச்சலை ஏற்படுத்தும் எச்சில். கண்ட இடத்தில் காறித்துப்பும் கேவலமான கலாசாரம் காலரா நோயைவிட வேகமாக மக்களிடையே பரவி நிற்கிறது.

யாரைக் குறித்தும் யாரும் கவலைப்படுவதில்லை. சமூகப் பொறுப்புணர்வு என்பது கொஞ்சம் கொஞ்சமாக அனைவரிடமும் குறைந்து கொண்டே வருகின்றது. இதில் படித்தவர் படிக்காதவர் என்று வேறுபாடுகள் எதுவும் கிடையாது.

“ஒரு தினத்தின் அழகிய செயலைச்செய்பவர் யார் எனில்; தமது எச்சிலை ஒதுக்குப்புறமாக மனிதர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் துப்பியவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சமூகப்பொறுப்பு இங்கிருந்துதான் தொடங்குகிறது. உண்மையில் எச்சில் குறித்து பேசுவது ஓர் அருவருப்பான விஷயம். ஆயினும் பேசியே ஆகவேண்டிய விவகாரம். சர்வ சாதாரணமாக நாம் காறி உமிழ்ந்துவிட்டுச் செல்கிறோம். ஏனையோருக்கு அது எவ்வளவு தூரம் இடைஞ்சலைத் தரும் என்பது குறித்து கவலைப்படுவது இல்லை.

ஓரமாகவும் பிறருக்கு இடைஞ்சல் இல்லாமலும் எச்சில் துப்புவது மார்க்க கடமை என்று கூறவரவில்லை. மாறாக, சமூகப்பொறுப்புணர்வு.
சமூகப் பொறுப்புணர்வு என்பது எச்சில் துப்புவதில் இருந்து தொடங்குகிறது என்பதை நம்மில் அனேகமானவர்கள் உணர்வதும் இல்லை. அடுத்தவருக்கு இடைஞ்சல் ஏற்படாமல் இருக்க இஸ்லாம் கற்றுத்தரும் ஒழுக்கவியல், மிகச்சிறந்த பண்பாடு. இந்தப் பண்பாட்டுப் பாசறையில் பட்டை தீட்டப்பட்டவர்களாகவே நமது முன்னோர்கள் இருந்துள்ளனர். ஆனால் நாம்தான் அதனைத் தவறவிட்டுவிட்டோம்.

ஆம், சர்வசாதாரணமாக நாம் துப்பும் எச்சில் ஏனையோருக்கும் தொந்தரவு தருமே என்பது குறித்தெல்லாம் இங்கே கவலைப்படுவதற்கு யாருக்கும் நேரம் இருப்பதில்லை. அது குறித்து உபதேசித்தால்கூட வேற்றுக்கிரகவாசியைப் போன்று ஒருவித விநோதப்  பார்வை பார்க்கின்றார்கள்.

மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளிலும் வீதிகளிலும் துப்பும் எச்சில் சிலபோது எரிச்சலை ஏற்படுத்துகின்றது. சேரிகளைக் குறித்து நாம் இங்கே பேசவில்லை. படித்த, நாகரிகம் அறிந்த பண்பட்ட மனிதர்களில் சிலர் பொதுஇடங்களில் நடந்துகொள்ளும் இதுபோன்ற அநாகரிகமான செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. முஸ்லிம்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளைக் குறித்து சொல்லவே வேண்டாம். அந்தப் பகுதிகளில் அண்ணலாரின் இந்த நபிமொழி காற்றில் பறப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் இரவில் பள்ளிவாசலுக்கு அருகே எச்சில் துப்பினார்கள். ஆனால் அதனை மண்போட்டு மூட மறந்த நிலையில் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். வீட்டுக்குச் சென்றபின்னரே பெருமானாருக்கு அது குறித்து நினைவுக்கு வந்தது. உடனே  ஒரு நெருப்புப் பந்தத்தை எடுத்தவாறு வீட்டைவிட்டு வேகமாக வெளியேறி பள்ளிவாசலுக்கு அருகே வந்து எச்சிலைத் தேடினார்கள். கண்டுபிடித்து அதனை மண்போட்டு மூடினார்கள். பின்னர் இவ்வாறு கூறினார்கள்: “இன்று இரவு என் வினைப்பட்டியலில் ஒரு குற்றச்செயல் பதிவு செய்யப்படுவதில் இருந்து என்னைப் பாதுகாத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்” (பத்ஹுல் பாரி)

இந்த ஒரு சிறிய செயலின் மூலம் எவ்வளவு பெரிய சமூகப்பொறுப்புணர்வை நபி (ஸல்) அவர்கள் இங்கே வெளிப்படுத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள்.

பொது இடங்களில் குப்பை கொட்டினாலோ எச்சில் துப்பினாலோ அபராதம் விதிக்கும் சட்டம் உள்ளது. நல்ல விஷயம்தான். ஆயினும் இதனை அமல்படுத்துவது யார்..? உத்தரவை மீறுவோரை யார் கண்டுபிடிப்பது? யார் நடவடிக்கை எடுப்பது? எதுவும் தெரியவில்லை.

விதிமீறலைக் கண்காணிப்பது சாத்தியமா? அபராதம் செலுத்தாவிட்டால் என்ன தண்டனை? என்பன போன்ற ஏராளமான கேள்விகள் இயல்பாகவே எழுகிறது.

சட்டங்களால் இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமா என்ற சிந்தனையும் எழுகிறது. சட்டங்களால் முடியுமோ முடியாதோ, ஆனால் சுயக் கட்டுப்பாடுகள் மூலமாக நிச்சயம் இதனை கட்டுப்படுத்தலாம்.

ஆம், சமூகப்பொறுப்புணர்வுடன் ஒவ்வொருவரும் நடந்துகொண்டாலே போதும். இந்த சமூகத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை என்பதை உணர்ந்து நடந்துகொண்டாலே போதும் ஓரளவு கட்டுப்படுத்தலாம். ஆகவே  மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவர் மீதும் இந்தச் சுயக்கட்டுப்பாடு கடமையாகிறது.

நான் ஒரு சாதாரணமானவன் தானே. எனவே எனக்கு இந்த சமூகத்தில் எந்த பொறுப்பும் இல்லை என்று யாரும் ஒதுங்கிவிட முடியாது. ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகளே.

கவனமில்லாமல் துப்பினால் அது அடுத்தவருக்குத் தொந்தரவு தரும் என்பது மட்டுமல்ல, சிலபோது அச்செயல் கொலையிலும் முடியும். பேருந்தில் எச்சில் துப்பிய மனிதர் கொலை செய்யப்பட்ட சம்பவம்கூட உண்மையில் நடந்துள்ளது. ‘கவனிக்கவில்லை, தெரியாமல் நடந்துவிட்டது’ என்று எச்சில் துப்பியவர் கூறியபோதும் அவரது பேச்சைக் காதுகொடுத்து கேட்கும் மனோ நிலையில் பாதிக்கப்பட்டவர் இருக்கவில்லை. இறுதியில் வாய் தகராறு கொலையில் முடிந்தது. ஏனெனில், ‘துப்பினால் நீ அடுத்தவரைக் கவனித்திருக்க வேண்டும்’ என்பது தான் அங்கு வாதம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் சமூகத்தின் நல்ல செயல்களும், தீய செயல்களும் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. அவற்றில் மூடப்படாத எச்சிலே தீய செயல்களின் பட்டியலில் அதிகமாக இருப்பதைக் கண்டேன்” (முஸ்லிம்)

இம்மை வாழ்வின் நோய் தொற்றுக்கு மட்டுமல்ல, மாறாக மறுமை வாழ்வின் மகத்தான வெற்றிக்கும்கூட சர்வ சாதாரணமாக நாம் துப்பும் இந்த எச்சிலும் சிலபோது முக்கியத் தடையாக அமைந்துவிடுமோ என்பதை எண்ணும்போது ஒருவித அச்சம் ஏற்படுகிறது.

தோற்றத்தாலோ, ஆடையாலோ, மொழியாலோ அல்லது செய்யும் தொழிலாலோ பண்பட்ட மனிதராக ஒருவர் மாறுவதில்லை. மாறாக சமூகப்பொறுப்புடன் கூடிய செயல்களின் மூலமாகவே ஒருவர் நல்லவராக அடையாளம் காணப்படுகின்றார்.

அடுத்தவருக்கு தொந்தரவு தராமல், எரிச்சலை ஏற்படுத்தாமல் கவனத்துடன் எச்சில் துப்புவதும் ஒருவகை சமூகப்பொறுப்புணர்வே.

- மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

Next Story