ஆன்மிகம்

ஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு + "||" + Aadi is the last Friday Special worship in Amman temples

ஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி கடைசி வெள்ளியையொட்டி சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சேலம்,

சேலம் மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் சேலத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று காலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். மேலும், உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மாரியம்மனுக்கு மீனாட்சி அலங்காரமும், காளியம்மனுக்கு காசி விசாலாட்சி அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. சஞ்சீவிராயன்பேட்டையில் உள்ள மாரியம்மன், காளியம்மன் சாமிகளுக்கு வெள்ளி கிரீடம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்து. இதையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொன்னம்மாபேட்டை மாரியம்மன் கோவிலிலும், வடக்கு அம்மாபேட்டை மாரியம்மன் கோவிலிலும் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு பல்வேறு பழங்களை கொண்டு கனி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அஸ்தம்பட்டி, மணக்காடு, அழகாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். அம்மாபேட்டையில் உள்ள பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் மணப்பெண் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவிலிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது.

இதேபோல், அன்னதானப்பட்டி மாரியம்மன், பெரமனூர் முத்துமாரியம்மன், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன், பொன்னம்மாபேட்டை மாரியம்மன் உள்பட மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.


அதிகம் வாசிக்கப்பட்டவை