ஆன்மிகம்

சுதக்‌ஷனை - புதிய தொடர் + "||" + Sudakshanai - new series

சுதக்‌ஷனை - புதிய தொடர்

சுதக்‌ஷனை - புதிய தொடர்
ராமாயணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.
பெண்களும் அதே சத்தியத்தை அன்பு என்ற சொல்லின் மூலம் உரைத்தவர்கள். சத்தியத்தை காப்பது மட்டுமே இந்த மனித வாழ்வின் லட்சியமாக இருக்க வேண்டும் என்பதை தன் கணவனுக்கும், குழந்தை களுக்கும் உபதேசம் செய்தவர்கள்.

சீதையைத் தாண்டி எத்தனையோ பெண்கள் ராமரின் ஜனன நோக்கம் நிறைவேற மறைமுகமாக உதவியிருக் கிறார்கள். தங்கள் செயல்களால் ரகு வம்சத்தை மேன்மை அடையவும் செய்திருக்கிறார்கள். அதிகம் அறியப்படாத அந்த பெண்களின் குணநலன்களையும், தியாகங்களையும் இந்த தொடரில் காண்போம்.


‘கடவுள் மிகத் துல்லியமான திட்டமிடும் செயல்பாட்டாளர்.

முன்னதாகவோ, தாமதமாகவோ, எதுவும் நடத்த மாட்டார்.

தேவை மிகச் சிறிய அளவு பொறுமை, அதிக அளவு நம்பிக்கை.

அவர் கொடுப்பது நம் காத்திருப்புக்கு மிகச் சிறந்த பரிசேயாகும்.’

பலகோடி சூரியப் பிரகாசமாய் ஒரு ஒளி சுதக்‌ஷனையின் வயிற்றில் புகுந்தது.

பனித்துளி பட்டது போல் இன்பச் சிலிர்ப்புடன் கண் விழித்தாள். அவளைச் சுற்றிலும் பிரகாசமான ஒளி பரவி, தென்றல் காற்று குளுமையாய் இருந்தது. பறவை களின் கானம், ஆசிரமச் சிறுவர்களின் வேத கோஷம் என்று எல்லாமே மனதுக்கு இதமாய், ரம்மியமாய் இருந்தது.

இன்று எதோ நல்லது நடைபெறப் போகிறது என்றது உள்ளுணர்வு. நடப்பவை யாவும் இறைவன் சித்தம். அவன் நாடகத்தின் இறுதிப் பகுதி இன்று என்றது அவள் மனது.

இஷ்வாகு வம்ச அரசன் திலீபனின் அன்பு மனைவி, குழந்தை இல்லை என்று வேறு பெண்ணை மணக்காமல் இவள் மூலம் வாரிசு வேண்டும் என்று வசிட்டரின் குடிலுக்கு வந்திருக்கும் அரசனின் தோழி, தாட்சண்யம் மிகுந்தவள் என்பதாலேயே சுதக்ஷனை என்று அழைக்கப் படுபவள். மின்னல் கொடி போன்றவள். வேதத்தை விட்டு விலகிச் செல்லாத ஸ்மிருதி நூல் களைப் போல் அவள் தன் கணவனை, பக்தி யுடனும், சிரத்தையுடனும் பின் பற்றினாள்.

கணவனின் மதி மந்திரி. திலீபன் அவளின் சொல்லுக்கு மதிப்பளித்தான். நேசித்தான். தன் உடலின் சரிபாதியாகக் கருதினான். தம்பதிகள் இருவரும் அன்பினால் மட்டுமே செலுத்தப் பட்டவர்கள். தன் நாட்டுப் பிரஜைகளை தன் குழந்தையாக நேசித்த அரசன் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய பித்ரு காரியங்களைக் குறைவின்றிச் செய்ய வேண்டும், பித்ரு கடன் தீர்க்க தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று அரசபோகங்களை விளக்கி சாதாரண பிரஜையாக வசிட்டரிடம் வந்திருக்கிறான்.

அவன் அறியாமல் செய்த தவறை அவனுக்கு குரு உணர்த்தினார்.

“திலீபா ஒருமுறை நீ தேவலோகம் சென்று திரும்பும் போது வழியில் படுத்திருந்த காமதேனுவைக் கண்டு வணங்காமல் வந்து விட்டாய். அதில் கோபமடைந்த அப்பசு உனக்கு வாரிசு இல்லாமல் போகட்டும் என்று சாபமிட்டது. அதனால்தான் உனக்குக் குழந்தை இல்லை” என்று உணர்த்தினார்.

அரசன் வேதனையுடன் கை கூப்பி “ குருவே அது நான் தெரியாமல் செய்த தவறு. இதற்கு மன்னிப்பு இருந்தால் சொல்லுங்கள்” என்று வினயமாகக் கேட்டான்.

“வருணன் செய்யும் யாகத்துக்கு உதவுவதற்காக காமதேனு பாதாள லோகத்திற்குச் சென்றிருப்பதால் அதன் மகள் நந்தினி இங்கு இருக்கிறது. அதை நீ நன்றாகப் பராமரித்தால் உன் சாபம் விலகும்” என்றார்.

தம்பதிகள் அதைத் தன் குழந்தையாகப் பாவித்தார்கள். பசும்புல்லை உணவாகத் தந்து, பூச்சிகள் தாக்காதவாறு கவனித்து, கழுத்தில் அன்புடன் தடவிக் கொடுத்து அது முன் செல்லத் தான் பின் சென்றான். பார்த்துப் பார்த்து பசுவைக் கவனித்தான். சுதக்ஷனை அதற்குச் சூட்ட வாசனை மலர்களைக் கட்டி வைத்திருந்தாள். பசுக்கள் மேய்ச்சலுக்குச் செல்ல நேரமாகி விட்டது என்று அவசரமாக எழுந்து வெளியில் வந்தாள்.

இளஞ் சந்திரனைப் போல் பிரகாசமான முகம். இளந்தளிரைப் போல் சிவந்த நிறம். நெற்றியில் வெண்ணிற ரோமங்கள். கருமை நிறக் கண்களில் அன்பும், கனிவும் நிரம்ப நந்தினி அரசியை ஏறிட்டது. சுதக்ஷனையின் வயிறு குழைந்தது. கனவின் சிலிர்ப்பில் கண்கள் நிறைய இது என் குழந்தை என்று நந்தினியின் நெற்றியில் முத்தமிட்டாள். அதன் வாலில் மஞ்சள், குங்குமம் இட்டு, மாலை சூட்டி அழகு பார்த்தாள். அவள் ரசிப்பதை புன்னகையுடன் பார்த்தான் அரசன்.

“எல்லா உயிர்களையும் உன் குழந்தையாக நினைக்கிறாயா தேவி?”

“அதில் என்ன சந்தேகம் பிரபு? அரசி என்பவள் அன்னைதானே. பெண் என்பவளின் பெருமையே தாய்மைதானே. அதன் அன்பில்தானே உலகே இயங்குகிறது.” என்ற அரசி தன் கனவை அரசனிடம் கூறினாள்.

திலீபன் கனிவோடு பேசினான். “இறைவன் கருணை எப்போதும் நம் மீது இருக்கிறது தேவி. அதிசயம் எந்நேரமும் நிகழலாம். உறுதியுடன், நம்பிக்கையுடன் இரு. நம் லட்சியத்தை நாம் நிச்சயம் அடையலாம்”

“ஆம், உண்மையுடன் இடைவிடாத தொடர்பில் இருக்கலாம். நேர்மை, சத்தியம் என்ற பாதையை விட்டு விலக வேண்டாம். நந்தினியை நம்மிடம் சுயநலத்துக்காக இல்லாமல், நம் பொறுப்பில் விடப்பட்ட ஒரு வாயில்லா ஜீவன் என்ற, நம் குழந்தையாகக் காக்க வேண்டும். நம்மிடம் அடைக்கலமான இப்பசுவிற்கு எந்த ஆபத்து வந்தாலும் அதைக் காக்க நம் உயிரையும் தரலாம்” என்ற மனைவியைப் பெருமையுடன் பார்த்து விட்டு மற்ற பசுக்களுடன் மேய்ச்சலுக்குக் கிளம்பினான் அரசன்.

அழகிய தோற்றம், சிம்மம் போல் கம்பீரம், தர்மத்தின் பாதை விலகாமல் தன்னை அண்டியவர்களைக் காக்கும் திலீபனுக்கு நன்மையே நடக்கும் என்ற உணர்வுடன் சுதக்‌ஷனை தன் ஆசிரமக் கடமைகளில் ஈடுபட்டாள். அவர்களுக்குச் சோதனை காத்திருந்தது.

காட்டில் குகை ஒன்றில் நுழைந்த நந்தினியை சிங்கம் ஒன்று பிடித்து கொல்ல முயன்றது. அதைக் காப்பாற்ற தன் வாளை எடுத்த திலீபனின் கைகள் இயங்கவில்லை.

“நான் சிவபெருமானின் சேவகன் கும்போதரன். என் பகுதியில் அத்துமீறி நுழைந்த இப்பசுவைக் கொன்றே தீருவேன்” என்ற சிங்கத்திடம் வாதாடுகிறான் திலீபன். அதற்கும் செவி சாய்க்கவில்லை சிங்கம்.

“இதை காப்பாற்றுவேன் என்று உறுதி அளித்திருக்கிறேன். என்னை நம்பிய இதை ஆபத்திலிருந்து காப்பதே ஷத்திரிய தர்மம்.அதுவே சத்தியம். அதைக் காக்க முடியாத அரசன் உயிருடனிருந்து என்ன பயன்? தேவ பதவியே தருவதானாலும் வாக்கு மாற மாட்டேன். உனக்குத் தேவை ஒரு உயிர்தானே? இதோ என்னை எடுத்துக் கொள்’’ என்று பிடிவாதமாக அதன் முன் மண்டியிடுகிறான். அவன் உறுதியில் சிங்கம் விலகி சுயரூபம் அடைகிறது. திலீபன் கைகள் இயங்க ஆரம்பிக்கிறது. சோதனையில் வெற்றி பெறுகிறான் திலீபன்.

தாய்மை உணர்வுடன் தன்னை பராமரித்த சுதக்‌ஷனை மற்றும் தன்னைக் காப்பாற்ற உயிரையும் தரத் துணிந்த திலீபனின் கருணையில் மகிழ்ந்த நந்தினி தன் பாலைக் கறந்து அரச தம்பதி களைக் குடிக்கச் சொல்கிறது. குருவின் உத்தரவு பெற்று பாலைக் குடித்து, ஆசீர்வாதம் பெற்று நாடு திரும்பும் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது.

“அரசே, இவன் சத்தியத்தின் பரிசு. பொறுமை, நம்பிக்கை, அன்பு இதுவே வெற்றிக்கான ஆயுதங்கள். தடைகளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இல்லை என்றால் நம் வலிமையை நாம் உணர முடியாது. வலிமை என்பது உடல் அல்ல, மனம். அன்புடன் செய்யப் படும் எந்தக் காரியமும் வெற்றியைக் கொண்டு வந்து தரும்” என்ற சுதக்ஷனை அதன் படியே வாழ்ந்து காட்டுகிறாள் .

இப்படி இரு என்று சொல்லித் தருவதை விட அதுபோல் வாழ்ந்து காட்டினால் போதும் என்றவள் கணவனின் மதி மந்திரியாக இருந்தாள். நல்ல எண்ணங்களை, பண்புகளை தன் மகனுக்கு சொல்லித் தந்தவள், தாய்தான் முதல் ஆசிரியை என்று உணர்த்தினாள்.

மகன் ரகுவின் பராக்கிரமம், நல்ல குணங்கள், ஆற்றல் கண்டு பூரித்த அவள் இஷ்வாகு வம்சம் புகழுடன் சிறக்கும் என்ற திருப்தியுடன் இறைவன் பாதத்தில் பூவாக உதிர்க்கிறாள்.

ராமாவதாரத்தின் நோக்கம் சத்தியம், தருமம் உலகில் நிலை பெற வேண்டும் என்பதே. அதற்கான பாதை சுதக்ஷனையின் மூலம் முதலிலேயே போடப்படுகிறது. தங்கள் வம்ச வழித் தோன்றல்களுக்கு சத்தியம், தருமம், நேர்மையே மூச்சு என்று போதிக்கிறார்கள் பெண்கள்.

வெளிப்படாத அப்பெண்களே இஷ்வாகு வம்சத்தின் பெருமைக்கு காரணம்.

ஆனால் அவர்கள்தான் அஸ்திவாரம்.

- தொடரும்.