திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை தீப தேரோட்டம் பக்தர்கள் குவிகிறார்கள்


திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை தீப தேரோட்டம் பக்தர்கள் குவிகிறார்கள்
x
தினத்தந்தி 18 Nov 2018 11:00 PM GMT (Updated: 18 Nov 2018 10:15 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை(செவ்வாய்க்கிழமை) கார்த்திகை தீப விழா தேரோட்டம் நடக்கிறது.

திருவண்ணாமலை,

புகழ் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகாதீபம் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஏற்றப்படுகிறது. இதையொட்டி தீப திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

5-ம் நாளான நேற்று காலை வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.

அதைத்தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கார்த்திகை தீப திருவிழா தொடங்கி உள்ளதால் வழக்கத்தைவிட நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. முன்னதாக காலையில் 63 நாயன்மார்கள் வீதி உலாவும், தொடர்ந்து வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலாவும் நடக்கிறது.

மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு மேல் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதி உலா செல்கிறது.

2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேர் (சாமி தேர்) இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் வடம் பிடித்து இழுப்பார்கள். பெரிய தேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும்.

வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் நகரின் அருகில் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது.

இதற்கு பயன்படுத்தப்படும் மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது. இந்த தீப கொப்பரைக்கு நேற்று பூஜை நடத்தி ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

மகாதீபம் ஏற்ற ஒரு சில நாட்களே இருப்பதாலும் தேரோட்டம் நாளை நடைபெற உள்ளதாலும் திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வருகிறது.

இதையொட்டி திருவண்ணாமலையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Next Story