சயன கோலத்தில் அருளும் பள்ளிகொண்டீஸ்வரர்


பள்ளிகொண்டீஸ்வரர்
x
பள்ளிகொண்டீஸ்வரர்
தினத்தந்தி 11 Dec 2018 7:00 AM GMT (Updated: 11 Dec 2018 7:00 AM GMT)

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ளது சுருட்டப்பள்ளி. இங்கு பள்ளிகொண்டீஸ்வரர் சுவாமி திருக்கோவில் இருக்கிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றது இந்தத் திருத்தலம். பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பெரும்பான்மையான மூர்த்திகள் குடும்ப சமேதராக காட்சி தருவது, இந்தக் கோவிலின் முக்கிய அம்சமாகும்.

இந்த ஆலயத்தில் அருளும் பள்ளிகொண்டீஸ்வரர், சர்வ மங்களாம்பிகையின் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் காட்சி தருகிறார். பரந்தாமனை போலவே பரமேஸ்வரன் பள்ளிகொண்ட ஒரே கோவில் இது என்பது சிறப்பாகும்.

இந்திரன் அமிர்தம் வேண்டி பாற்கடலை கடைய முற்பட்டான். திருமாலின் உதவியோடு தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமும் நின்று, வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். இருபுறமும் பிடித்து இழுத்ததால், வாசுகி பாம்பு வலி தாங்க முடியாமல் விஷத்தை கக்கியது. இதை கண்டு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் கயிலை நாதனான சிவனிடம் தஞ்சம் அடைந்து அனைவரையும் காக்க வேண்டினர்.

ஈஸ்வரன் தன் அருகில் இருந்த சுந்தரரை அனுப்பி, விஷத்தை திரட்டி எடுத்து வரச் செய்தார். சுந்தரரும் பாற்கடலில் தோன்றிய மொத்த விஷத்தையும் ஒன்று திரட்டி, ஒரு கரு நாவல்பழம் போல செய்து சிவபெருமானிடம் கொடுத்தார். பரமேஸ்வரன் அந்த கொடிய நஞ்சினை வாயில் போட்டு விழுங்கினார். விஷம் உடலுக்குள் இறங்காமல் இருக்க, ஈசனின் கண்டத்தை (கழுத்தை) பிடித்தாள் உமாதேவி. இதனால் விஷம் கண்டத்திலேயே நின்று விட்டது. அதனால் தான் ஈசனை ‘நீலகண்டன்’ என்று அழைக்கிறோம்.

விஷத்தை அருந்திய பின், உமையவளுடன் சிவபெருமான் கயிலாயம் புறப்பட்டார். வழியில் அவருக்கு களைப்பு ஏற்பட்டது. அதனால் அவர் ஓரிடத்தில் ஓய்வெடுத்தார். பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து களைப்பு நீங்க சயனித்தார். அந்த இடமே சுருட்டப்பள்ளி என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் பார்வதி தேவி ‘சர்வமங்களா’ என்ற திருநாமத்துடன் அருள்கிறார்.

5 அடி உயர நந்தீஸ்வரர்
இந்த கோவிலில் பள்ளிகொண்டீஸ்வரர் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தில் தான், முதன் முதலில் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டதாகவும், அதன்பிறகே மற்ற சிவ ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு தொடங்கியதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. பள்ளிகொண்டீஸ்வரரை சுற்றி பிருகு முனிவர், பிரம்மா, மகாவிஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், அகத்தியர், புலஸ்தியர், கவுதமர், தும்புரர், வசிஷ்டர், விசுவாமித்திரர், வால்மீகி, தேவேந்திரனோடு விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் முருகன் ஆகியோரும் அருட்காட்சி புரிகிறார்கள்.

3 நிலை கொண்ட ராஜகோபுரத்தின் எதிரே, சுமார் 5 அடி உயர பீடத்தில் 5 அடி உயர நந்தீஸ்வரர் உள்ளார். இந்த கோவிலில் துவாரபாலகர்கள் கிடையாது. அதற்கு பதிலாக சங்கநிதி வசுந்தராவுடனும், பத்மநிதி வசுமதியுடனும் காட்சி தருகிறார்கள். உள்ளே சென்றால் நின்ற கோலத்தில் அன்னை மரகதாம்பிகை சிம்ம வாகினியாக காட்சி தருகிறார். கருவறைக்கு வெளியே அர்த்த மண்டபத்தில் வலது பக்கத்தில் கற்பக விருட்சம், இடது பக்கத்தில் காமதேனு பசு காணப்படுகிறது.

ஏகபாத திரிமூர்த்தி
மரகதாம்பிகை சன்னிதி முன்பாக சாளக்கிராம கணபதியும், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியரும், இடது புறம் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய நாயன்மார்களின் திருவுருவச்சிலைகளும், வால்மீகி மகரிஷியின் சிலையும் உள்ளது. அதற்கு அடுத்து ஏகபாத திரிமூர்த்தி காட்சி அளிப்பது அரிய ஒன்றாகும். தான் ஒருவராய் படைத்தல், காத்தல் தொழில் புரிபவராக பிரம்மா, விஷ்ணுவை தன்னிடத்தே கொண்ட சிவவடிவமே ‘ஏகபாத திரிமூர்த்தி’ ஆவார். பிரம்மா நான்கு முகங்களுடன் அன்ன வாகனத்துடனும், சிவன் நந்தியுடனும், விஷ்ணு கருடாழ்வாருடனும் ஒரே கல்லில் மிக அழகான சிற்பமாக காட்சி அளிக்கிறார்கள்.

வரசித்தி விநாயகர் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். தேவர்களுக்கு ஏற்பட்ட வெப்ப நோயை தணிப்பதற்காக, சிவன் தனது கையில் அக்னியுடனும், மூன்று தலை, மூன்று கால்கள், மூன்று கைகளுடன் எடுத்த அவதாரமே ஜுரஹரமூர்த்தி. இந்த சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

மரகதாம்பிகை சன்னிதி அருகில் ராஜராஜேஸ்வரி, மகாலட்சுமி, சரஸ்வதி, அன்னபூரணி ஆகிய தேவிகளின் சிலைகள் உள்ளன. கையில் கிளியுடன் அழகிய வடிவில் ஞானதுர்க்கை காட்சி தருகிறார். வடக்கு பிரகாரத்தில் சுப்பிரமணியர் தனது இரு தேவியர்களுடன் தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார். ராஜயோகத்தை தரும் ராஜமாதங்கி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு கீழே ஒரு சுரங்கப்பாதை காணப்படுகிறது.

அதிகார நந்தி
பிரம்மாவுக்கு கீழே தனி சன்னிதியில் சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம். சப்த கன்னிமார்கள் 7 பேரும் தங்களது வாகனங்களுடன் காட்சி தருகின்றனர். இங்கு பிரதோஷ மூர்த்தி வண்ணப்படமாக தனி சன்னிதியில் உள்ளார். இந்த சன்னிதியின் வெளிப்புறத்தில் வேணுகோபாலசுவாமி தனது கரங்களில் புல்லாங்குழலுடன் காட்சி தருகிறார். மற்றொரு பக்கம் வேறெங்கும் காண முடியாத வகையில், நந்தீஸ்வரர் கைகூப்பிய நிலையில் அதிகார நந்தியாக அருள்கிறார்.

கிழக்கு பக்கத்தில் ஒரு சன்னிதியில் சீதாதேவி, ராமர், லட்சுமணன் அருள்கின்றனர். அவர்களுக்கு அருகில் பரதன், சத்ருக்னர், ஆஞ்சநேயர் உள்ளனர். இதை கடந்து சென்றால் ராமலிங்கேஸ்வரர், பர்வத வர்த்தினியுடன் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். அருகில் வால்மீகிஸ்வரர் சிலை உள்ளது.

பல கோவிலில் பலவிதமான தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். ஆனால் இங்கு தட்சிணாமூர்த்தி தனது மனைவியுடன் காட்சி தருகிறார். இது வேறு எந்த கோவிலிலும் காணக்கிடைக்காத அற்புதம் ஆகும். இந்த தட்சிணாமூர்த்தியை வணங்கினால் ஞானம், கல்வி, குழந்தைபேறு, திருமண பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

பிரதோஷ வழிபாடு
இந்த கோவிலில் பிரதோஷ கால வழிபாடு பிரசித்தி பெற்றது. மேலும் திருவாதிரை, மகா சிவராத்திரி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு வருடப் பிறப்பு நாட்கள், நவராத்திரி தினங்களில் இக்கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

அமைவிடம்
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புத்தூர் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் சுருட்டப்பள்ளியில் நின்று செல்லும். நாம் பஸ்சைவிட்டு இறங்கினாலே, பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலின் கோபுரம் நம்மை வரவேற்கும்.

Next Story