உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்


உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்
x
தினத்தந்தி 10 Aug 2019 11:54 AM GMT (Updated: 10 Aug 2019 11:54 AM GMT)

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் விசேஷமானவர்கள். கடவுள் சகலவற்றையும் படைத்தார்.

பறவைகள், மிருகங்கள், சமுத்திர மச்சங்கள், இயற்கை, வானம், பூமி இவை அனைத்தும் கடவுளின் சிருஷ்டியே.

‘இவையெல்லாவ‌ற்றையும் உண்டாக்கின தேவன், மனிதனை தம்முடைய சாயலாகவும் அவருடைய ரூபத்தின்படியும் சிருஷ்டித்தார்’ என்று திருமறை தெளிவாகக் கூறுகிறது (ஆதி 1:26).

“கடவுள், ‘மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவை களையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்’ என்றார்”.

தெய்வத்தின் சாயலில் சிருஷ்டித்த மனுக்குலத்தை தேவனாகிய கர்த்தர் பலுகி பெருகி பூமியை நிரப்பும்படி ஆசீர்வதித்தார். தேவன் அவருடைய நற்குணங்களை மனிதனுக்குள் வைத்தார். அதில் பிரதானமான குணம் என்று கருதப்படும் ‘பிறருக்கு உதவி செய்யும் குணாதிசயம்’ நம்மிடயே அதிகமாக காணப்படுவதில்லை.

எத்தனையோ மனிதர்கள் திக்கற்றவர் களாக, அனாதைகளாக, விசாரிப்பாரற்றவர் களாக, தனிமையில் வேதனையில் கண்ணீர் வடிப்பது உண்டு. ‘நான் நம்பின மனிதர்கள் என்னை கைவிட்டார்களே, என் உறவுகள் என் சொந்தங்கள் என்னைக் கைவிட்டுவிட்டதே’ என்று அங்கலாய்க்கிற உள்ளங்கள் எத்தனையோ உண்டு. ஏன் தன் சொந்தப் பெற்றோர்களைத் தவிக்கவிடுகிற எத்தனை பிள்ளைகள் உண்டு.

இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு நற்செய்தியை, ஆறுதலான செய்தியை வேதம் எடுத்துரைக்கிறது.

‘நசரேனாகிய இயேசு, நன்மை செய்கிறவராய் பூமியில் அவர் வாழ்ந்த நாட்களில் சுற்றித்திரிந்தார்’ (அப் 10:38).

இந்த நசரேனாகிய இயேசு யார்?

அவர்தான் உதவி செய்யும் தெய்வம். ஆம், அவர்தான் மனுக்குல மீட்பிற்காக, இரட்சிப்பிற்காக, பூமியில் அவதரித்த இறைமகன்.

‘ஆண்டவர் உதவி செய்கிற தெய்வமாக இன்றும் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்’.

ஆம், அவர் என்றன்றைக்கும் சதாகாலமும் உயிரோடிருக்கிற தேவன்.

“மரித்தேன், ஆனாலும் இதோ சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்” என்று திருவுளம்பற்றியவர் இயேசு பிரான் (வெளி 1:18).

இந்த தெய்வம் நிச்சயமா உங்களுக்கு உதவி செய்தார். நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் சரி உங்களுக்கு அவர் உதவி செய்து உங்களை ஆசீர்வதிப்பார்.

நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். நம்பிக்கையோடு அவரை நோக்கி வேண்டுதல் செய்வதே.

ஒரு முறை கடலில் மூழ்கிக்கொண்டிருந்த பக்தன் பேதுரு, ‘ஆண்டவரே என்னை இரட்சியும்’ என்று கதறி கூப்பிட்டான்.

இயேசு அவன் கரங்களை பிடித்து மரணத்திலிருந்து அவனைக் காப்பாற்றினார்.

ஒருமுறை ஒரு குருட்டுப் பிச்சைக்காரன், ‘ஆண்டவரே எனக்கு இரங்கும்’ என்று சத்தமிட்டு கூப்பிட்டான்.

அவன் வேண்டுதலைக் கேட்டு அவனுக்கு பார்வையளித்தார் அருள் நாதர் இயேசு.

ஆம், அவர் வியாதியில் உதவி செய்கிற தெய்வம்.

ஒருமுறை ஒரு ஸ்த்ரீ, ‘ஆண்டவரே, எனக்கு உதவி செய்யும். என் மகன் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறான்’ என்று கூப்பிட்டார்.

ஆண்டவர் அவளுக்கு இரங்கி அந்த பிசாசை துரத்தி அவளுக்கு உதவி செய்தார்.

தொழிலிலே ஒரு ஆசீர்வாதமும் இல்லாமல் இருந்த பேதுருவை சந்தித்து, படகு நிறைய மீன்களைப் பிடித்துக் கொடுத்து அவன் தொழிலை, வியாபாரத்தை ஆசீர்வதித்த தெய்வம் அருள் நாதர் இயேசு.

தன் கைகளில் இருந்த கடைசி காசையும் கொண்டு வந்து காணிக்கைப் பெட்டியில் போட்ட ஏழை விதவையை மறக்காமல் போஷித்த வள்ளல் அவர்.

இன்றைக்கு உங்களுக்கும் நிச்சயமாக உதவி செய்வார். வியாதியிலிருந்து பிசாசின் பிடியிலிருந்து, மரணத்திலிருந்து, வியாபார நஷ்டத்திலிருந்து இவர்களைக் காப்பாற்றின தெய்வம் நிச்சயமாய் உங்களுக்கும் உதவி செய்வார்.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். ‘நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்’ (பிலி 4:6) என்கிற வாக்கின்படியாகவும்,

“கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்” (மத் 7:7) என்கிற வாக்கின்படியாகவும், ஆண்டவராகிய இயேசுவை நோக்கிக்கூப்பிடுங்கள்.

நிச்சயமாய் ஆண்டவர் உங்களுக்கும் உதவி செய்து உங்களை ஆசீர்வதிப்பார். காரணம், அவர் உதவி செய்யும் தெய்வம். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் இந்த தெய்வம். அன்றைக்கு இவரை நோக்கி கூப்பிட்டவர்களுக்கு உதவி செய்தது போல இன்றைக்கும் அவர் உதவி செய்வார்.

உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும், நீங்களும் உங்கள் நன்மைகளை பெற்றுக்கொள்வீர்கள், ஆமென்.

- சகோ சி. சதீஷ், வால்பாறை.

Next Story