பசுமை வழிச்சாலை பிரச்சினைக்கு ஒரு தீர்வு


பசுமை வழிச்சாலை பிரச்சினைக்கு ஒரு தீர்வு
x
தினத்தந்தி 25 Jun 2018 6:48 PM GMT (Updated: 2018-06-26T00:18:39+05:30)

மோட்டார் தொழிலின் முன்னோடியாக கருதப்படும் ஹென்றிபோர்டு கூறிய பழமொழிதான், ‘எதிலும் குற்றம் கண்டுபிடித்து கொண்டிருக்காதீர்கள், ஒரு தீர்வை காணுங்கள்’ என்பதாகும்.

அதற்கு பொருத்தமாக இப்போது சென்னை–சேலம் இடையே தொடங்க திட்டமிட்டுள்ள பசுமை வழிச்சாலை வேண்டுமா?, வேண்டாமா? என்பது குறித்து ஏற்பட்டுள்ள சர்ச்சைகள்தான் இருக்கிறது. அரசு தரப்பில் வேண்டும் என்றும், அந்தப்பகுதி விவசாயிகள், அரசியல் கட்சிகள் தரப்பில் வேண்டாம் என்றும் பரிமாறிக்கொள்ளப்படும் கருத்துகளாகும். மத்திய அரசின் ‘பாரத் மாதா பிரயோஜனா’ திட்டத்தின்கீழ், சென்னை–சேலம் இடையே 277.3 கி.மீட்டர் தூரத்திற்கு பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது சென்னையில் இருந்து சேலம் செல்ல

2 வழிகள் இருக்கின்றன. இந்த வழிகள் ஏறத்தாழ 350, 360 கி.மீட்டர் தூரம் இருக்கின்றன. ஆனால், புதிதாக அமைக்கப்படும் இந்த பசுமை வழிச்சாலை தாம்பரத்தில் இருந்து காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் வழியாக சேலம் சென்றடையும். இந்த வழியாக சென்றால் சேலத்திற்கு

3 மணி நேரத்தில் சென்றுவிடமுடியும். ரூ.10 ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்றப்பட இருக்கும் இந்த திட்டத்திற்காக, 1,900 ஹெக்டேர் நிலம், வீடுகள் கையகப்படுத்தப்படவேண்டும். அரசாங்கத்தின் திட்டப்படி இந்த சாலையில் இரண்டு பக்கமும் 3 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை அமைந்தால், சாலையின் இருமருங்கிலும் ஏராளமான புதிய தொழிற்சாலைகள் அமைய வாய்ப்பு இருப்பதாகவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இந்த பசுமை வழிச்சாலை அமைய யார்–யார் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறதோ, அந்த விவசாயிகளில் பலர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் வாழ்வாதாரமே முற்றிலும் அழிந்து போய்விடும் என்று பயப்படுகிறார்கள்.

அரசு தரப்பில் குறைந்தபட்சம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கலெக்டர் ரோகினி பாஜிபாகரே அந்த மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.9 கோடியே 4 லட்சம்வரை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இருந்தாலும் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துகொண்டிருக்கும் தங்கள் பூமி கையைவிட்டு போகிறதே என்ற வருத்தம் விவசாயிகளுக்கும் இருக்கிறது. பசுமை வழிச்சாலை எதற்கு இப்போது?. சென்னையில் இருந்து விழுப்புரம், உளுந்தூர்பேட்டை வழியாக சேலத்திற்கு செல்லும் சாலையையே 8 வழிச்சாலையாக மாற்றலாமே என்ற கருத்தையும் அவர்கள் முன்வைக்கிறார்கள். இவ்வாறு மோதல்கள், உரசல்கள் ஏற்படாமல் மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிக்கப்படும் விவசாயிகள் அனைவரையும் அழைத்து பேசவேண்டும். மத்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் வல்லுனர் மதிப்பீட்டுக்குழு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இந்த பிரச்சினையில் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்தி அறிக்கை அனுப்ப கேட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் அந்தந்த பகுதியில் யார் நிலங்கள் எல்லாம் கையகப்படுத்தப்பட இருக்கிறதோ, அவர்களையெல்லாம் அழைத்துப்பேசி அவர்களிடம் இருந்து கையகப்படுத்தும் நிலம், வீடுகள், கிணறுகள் போன்ற சொத்துகளுக்கு எவ்வளவு இழப்பீடு, அரசு சார்பில் என்னென்ன உதவிகள் வழங்கப்படும் என்று விளக்கி சுமுக முடிவு எடுக்கப்படும்வரை எந்த பணிகளையும் தொடங்கக்கூடாது. 

Next Story