கேரளாவில் பெரும் பாதிப்பு


கேரளாவில் பெரும் பாதிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2018 10:36 PM GMT (Updated: 10 Aug 2018 10:36 PM GMT)

தமிழன்னையின் சகோதரிகள்தான் கேரளாம்பா, கன்னட தாய், தெலுகு தள்ளி ஆகியோர்.

ஆதிசங்கரர் மற்றும் காஷ்மீர் பண்டிதர்களே இந்த 4 மாநிலங்களையும் உள்ளடக்கித்தான், ஆதியிலே ‘திராவிடம்’ என்றார்கள். ஆக, ஒருவருக்கு ஏற்படும் சுகத்துக்கங்களில் அடுத்தவர்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். அதுதான் சகோதரப்பாசம். அந்த வகையில், கேரளாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் கனமழை மற்றும் பெருவெள்ள சேதம், தமிழ் நாட்டிலுள்ள சகோதர-சகோதரிகளுக்கு பெரிய கவலையை கொடுத்துள்ளது. அங்கு தற்போது வரலாறு காணாத மழை பெய்து கொண்டிருக்கிறது. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதுபோல, இதுவரையில் இல்லாத அளவிற்கு இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல், அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதால், ஒரேநேரத்தில் 24 பெரிய அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன. இடுக்கி, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம் போன்ற மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன. ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புபடை, கடலோர காவல்படை நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

ஆசியாவிலேயே பெரிய அணைகளில் ஒன்று என்று கருதப்படும் இடுக்கி அணை முழுஉயரமான 554 அடியை எட்டியதால், 26 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று காலையிலேயே வெள்ளப்பாதிப்பால் 26 பேர் இறந்திருக் கிறார்கள். எல்லா அணைகளும் ஒரேநேரத்தில் திறந்து விடப்பட்டுள்ளதாலும், ஆறுகளில் எல்லாம் கடுமையான வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாலும், கேரள மாநிலத்தில் ஏராளமான மக்கள் வீடு இழந்து தவிக்கிறார்கள். ஆற்று வெள்ளத்தில் காட்டுமான்கள் கூட்டம் கூட்டமாக அடித்துச் செல்லப்படுகிறது. எல்லா ஆற்றுத் தண்ணீரும் மேற்குநோக்கித்தான் பாய்வதால் அரபிக்கடலில் போய் வீணாக கலக்கிறது. கேரளாவில் வெள்ளம் என்றவுடன், ‘தான் ஆடாவிட்டாலும், தன் தசை ஆடும்’ என்பதுபோல, துடித்துப்போன தமிழர்களின் உணர்வை வெளிக்காட்டும் வகையில், அவர்களுக்கு ஆறுதல் செய்தியை மட்டும் கொடுக்காமல், உடனடியாக முதல்கட்டமாக தமிழகத்தின் சார்பில் ரூ.5 கோடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு பெருஞ்சேதம் கேரளாவில் ஏற்படாமல் ஓரளவு தடுக்கப்படவேண்டும் என்றால், கேரளாவில் மேற்குநோக்கி பாயும் 90-க்கும் மேலான ஆறுகள் மற்றும் சிறுகுறு நீர்நிலைகள் கிழக்கே தமிழ்நாடு பக்கம் திருப்பி விடப்பட்டால் நிச்சயமாக பலனளிக்கும். இதில் 2 பலன்கள் இருக்கிறது. ஒன்று கேரளாவில் வெள்ள நேரத்தில் பெருஞ்சேதம் தவிர்க்கப்படும். மற்றொன்று வறட்சியால் வாடும் தமிழ்நாட்டுக்கு, கடலில்போய் வீணாக கலக்கும் தண்ணீரை திருப்பிவிட்டு, தங்கள் சகோதரப்பாசத்தை காட்டலாம். மேற்குநோக்கி பாயும் ஆறுகளை, கிழக்கே தமிழ்நாடு பக்கம் திருப்பவேண்டும் என்று 1983-ம் ஆண்டிலேயே தி.மு.க. செய்தித் தொடர்பாளரும், ஐகோர்ட்டு வக்கீலுமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்து, 2012-ம் ஆண்டு அந்த வழக்கின் தீர்ப்பில், ஏற்கனவே மத்திய அரசாங்கம் 1976-ம் ஆண்டு ஒப்புக்கொண்டபடி, இது குறித்தான அறிக்கையை ஏற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதற்கான குழுவும் அமைக்கப்பட்டது. அந்தக்குழுவும் பரிசீலித்து வருகிறது. இந்த பணிகளை இன்னும் வேகப்படுத்த வேண்டும். கேரளா இதை எதிர்த்து வருகிறது. இந்தத்திட்டம் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. மொத்தத்தில், இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டுமென்றால், அண்டை மாநிலங்களுடன் நல்லுறவுடன் இருக்க வேண்டும். அண்டை மாநிலங்களுக்கு இடையே உரசல்கள் இனியும் இருக்கக் கூடாது. உறவு மலர வேண்டும். 

Next Story