பீதி அடையவேண்டாம், ஆனால் விழிப்புணர்வு வேண்டும்


பீதி அடையவேண்டாம், ஆனால் விழிப்புணர்வு வேண்டும்
x
தினத்தந்தி 9 March 2020 10:00 PM GMT (Updated: 9 March 2020 4:19 PM GMT)

எது தமிழ்நாட்டில் நடந்துவிடக்கூடாது என்று எல்லோரும் அச்சப்பட்டுக்கொண்டு இருந்தோமோ அது நடந்துவிட்டது. கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் கால்பதித்துவிட்டது.

டந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி சீனாவில் பரவத்தொடங்கிய இந்த கொரோனா வைரஸ், தற்போது 95 நாடுகளில் பரவி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 43 பேர் இப்போது இந்த வைரசால் பாதிக்கப் பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இந்த நோய் கால்பதித்துவிடக் கூடாது என்ற நிலையில், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட்டில் இருந்து கடந்தமாதம் 27-ந்தேதி விமானத்தில் சென்னைக்கு வந்த காஞ்சீபுரத்தைச் சேர்ந்த 45 வயதான என்ஜினீயர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவ மனையில் தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். மேலும் 2 பேர் பாதிக்கப்பட்டு இருக்கலாமோ? என்ற நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழ்நிலையில், அமெரிக்காவில் இருந்து வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேபாளத்துக்கு சென்றுவிட்டு வந்த ரெயில்வே ஊழியருக்கு பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில் பரிசோதனை நடந்து வருகிறது. அவரது ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது சார்ஜாவில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்று பரிசோதனை நடந்து வருகிறது.

மக்களிடம் தற்போது கொரோனா வைரஸ் பற்றி தேவையற்ற ஒரு பயம் நிலவுகிறது. எல்லா விமான நிலையங்களிலும் இப்போது பயணிகள் கூட்டம் இல்லாமல் குறைந்த பயணிகளுடனேயே செல்லும்நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் இருக்கிறதா? என்ற வகையில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இதுபோல, வெளிமாநிலங் களில் இருந்து வரும் பயணிகளுக்கு ஏதாவது அறிகுறிகள் இருக்கிறதா? என்பதைக்கேட்டு ரெயில் நிலையங்களில் மருத்துவ பரிசோதனை வசதிகள் செய்யவும் ஏற்பாடு செய்யவேண்டும். கோழிக்கறியால் கொரோனா பரவி விடுமோ? என்ற வதந்தியால் கோழிக்கறி விலை கிலோ ரூ.32 ஆகிவிட்டது. இப்படி கொரோனா வைரஸ் பற்றி பரவும் தேவையற்ற பீதி தேவையே இல்லை. ஆனால், எல்லோரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும். கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு இருமல் மற்றும் தும்மல் ஏற்படும்போது அவர்களது வாயில் இருந்து வெளிவரும் நீர் துளிகளால்தான் அதிக அளவில் பரவுகிறது. இதனால் சோப்பு மற்றும் சானிடைசர் என்ற சுத்திகரிப்பு திரவம் கொண்டு தண்ணீரில் நன்றாக கைகளை கழுவவேண்டும். இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுமானவரையில் வீட்டில் இருந்து வேலைபார்ப்பது நல்லது. தும்மும்போதும், இருமல் வரும்போதும் துணிவைத்து வாயை மூடிக்கொண்டால் இந்த நோய் பரவுவதை குறைக்கலாம்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு செல்லும் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவேண்டும். நோயை குணமாக்குவதைவிட, அது வராமல் தடுப்பதே சாலச்சிறந்தது என்ற வகையில், எல்லாவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துவிட்டால், இந்த நோய் வந்துவிடுமோ? என்ற பயம் ஒருபோதும் தேவையில்லை. ஆனால், இந்த தடுப்பு நடவடிக்கைகள் என்ன என்பது சாதாரண பாமர மக்களுக்கு தெரியும் வகையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை, பத்திரிகைகளிலும், டெலிவிஷன் களிலும், எப்.எம். ரேடியோக்களிலும் விளம்பரம் செய்ய வேண்டும். எல்லா செல்போன்களிலும் ஏதாவது எண்ணை தொடர்பு கொள்ள முயற்சிக்கும்போது ‘ரிங்’ டோன்களுக்கு பதிலாக, கொரோனா வைரசை பரவாமல் தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? என்ற செய்தி தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இது ஆங்கிலத்தில் இருப்பதால் சாதாரண மக்களுக்கு புரியவில்லை. எனவே, எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் தெரிவித்தால் அதன்படி நடந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Next Story