தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு சோதனை


தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு சோதனை
x
தினத்தந்தி 19 May 2020 10:30 PM GMT (Updated: 19 May 2020 5:44 PM GMT)

தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு சோதனை.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உருவெடுத்த கொரோனா என்ற கொடிய வைரஸ் எல்லா நாடுகளையும் இப்போது தொற்றியுள்ளது. இந்தியாவில் ஜனவரி 20-ந்தேதி கேரள மாநிலத்தில் முதல் பாதிப்பு தொடங்கி, அடுத்தடுத்து பல மாநிலங்களில் பாதிப்புகள் பரவத்தொடங்கின. தமிழ்நாட்டில் மார்ச் 7-ந்தேதிதான் முதலில் கால் எடுத்து வைத்தது. மஸ்கட்டில் இருந்துவந்த காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர்தான் முதல் கொரோனா பாதிப்பை கொண்டுவந்தார். அடுத்து சிலர் வெளிநாடுகளில் இருந்து கொரோனாவோடு வந்தனர். தொடர்ந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தநிலையில், அவர்களோடு தொடர்பு கொண்டவர்கள், அந்த தொடர்புகொண்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் என்று சங்கிலித்தொடர்போல இன்னமும் பாதிப்பு நீண்டுகொண்டே இருக்கிறது. ஒரு இறைவழிபாட்டு கூட்டத்தில் கலந்துகொண்டவர்களால் வடசென்னையில் மேலும் ஒரு பரவல் தொடங்கியது. இது போதாது என்று சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனாவின் கூடாரமாக மாறி அங்கு காய்கறி வாங்க வந்தவர்கள், அங்கேயே தங்கியிருந்து வேலைபார்த்த தொழிலாளர்கள், வியாபாரிகள், விற்பனைக்காக காய்கறிகள் கொண்டுவந்தவர்கள் என்று பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டவுடன் அங்கு வேலைபார்த்தவர்கள், சிறு சிறு வியாபாரிகள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு சென்றநிலையில் அங்கேயும் வேகமாக பரவத்தொடங்கிவிட்டது.

இந்தநிலையில், மத்திய அரசாங்கம் 12 மாநிலங்களில் உள்ள 30 நகராட்சிகளில்தான் இந்தியாவில் உள்ள மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 79 சதவீதம் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது. இந்த 30 மாநகராட்சி, நகராட்சிகளில், சென்னை, திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, அரியலூர், விழுப்புரம் ஆகிய நகரங்கள் இடம்பெற்றிருப்பது வேதனை அளிக்கிறது. தலைவலி போய், திருகுவலி வந்தது என்பார்கள். அதுபோல, இந்த பாதிப்புகளாலேயே தமிழ்நாடு திணறிக்கொண்டு, பாதிக்கப்பட்ட பட்டியலில் இந்தியாவில் மராட்டியத்திற்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் நின்றுகொண்டிருக்கும் நேரத்தில், வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு வருபவர்கள் கொரோனாவையும் கொண்டுவந்து சேர்க்கும் அதிர்ச்சியான நிலை தொடங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் தமிழ்நாட்டிற்கு வந்த 54 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களோடு அந்த விமானங்களில் பயணம் செய்த வேறு யாருக்காவது இவர்களால் கொரோனா தொற்று பரவியிருக்கிறதா? என்று சோதனைகள் நடந்து வருகின்றன. இதுபோல, டெல்லி, மராட்டியம், குஜராத் போன்ற பல வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு ரெயில் மூலம் அழைத்துவரப்பட்ட மற்றும் தனி பஸ்களில் வந்த 300-ஐ எட்டிப்பிடிக்கும் அளவிலான பயணிகளுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களோடு பலமணி நேரம் ஒன்றாக பயணம் செய்த மற்ற பயணிகளுக்கும் பரவியிருக்கிறதா? என்பது இனிதான் தெரியும்.

மும்பை தாராவி உலகிலேயே மக்கள்தொகை அதிக அடர்த்தியுள்ள பகுதி. 2.1 சதுர கி.மீட்டர் பரப்பில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். பெரும்பாலானோர் சிறு சிறு குடிசைகள் போன்ற வீடுகளில்தான் வாழ்கிறார்கள். ஒரே கழிப்பறையை 70-க்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது. அங்கு தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். கொரோனாவால் ஏராளமானோர் கொத்து கொத்தாய் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள தமிழர்கள் எல்லாம் பஸ்களை வாடகைக்குப்பிடித்து தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டு இருக்கிறார்கள். வெளிமாநிலங்களில் இருந்து வருகிறவர்கள் எல்லாம் கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசுக்கும் இதைவிட்டால் வேறு வழியில்லை. இப்போது அறிகுறி இல்லையென்றாலும், சில நாட்களில் அவர்களுக்கும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அங்கேயும் பரவிவிடும். மாணவர்கள் படிக்கவேண்டிய, தங்கவேண்டிய இடங்களில் இவ்வாறு வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை தங்கவைப்பது மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில், சோதனைமேல் சோதனை, போதுமடா சாமி! என்றுதான் தமிழ்நாடு துயரத்தோடு பாடுகிறது.

Next Story