மீண்டும் ஊரடங்கா; தாங்குமா தமிழ்நாடு?


மீண்டும் ஊரடங்கா; தாங்குமா தமிழ்நாடு?
x
தினத்தந்தி 2 Aug 2020 9:45 PM GMT (Updated: 2 Aug 2020 5:46 PM GMT)

கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் முதல் ஊரடங்கு மார்ச் 25 முதல் ஜூலை 31-ந்தேதி வரை என மொத்தம் 129 நாட்கள் ஊரடங்கினால் தமிழ்நாடு பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

எதிர்காலத்தில் 22-ம் நூற்றாண்டில் என்றாலும் சரி, அல்லது அதற்கு பிந்தைய நூற்றாண்டில் என்றாலும் சரி, உலக வரலாற்றையோ, இந்திய வரலாற்றையோ, தமிழக வரலாற்றையோ எழுதும் வரலாற்று ஆய்வாளர்கள் யாரும் இப்போது பெரும்பாடுபடுத்திக்கொண்டிருக்கும், கொரோனா நோயை பற்றித்தான் மிக விரிவாக எழுதுவார்கள். இவ்வளவு பாதிப்பு அந்தக்காலங்களில் இருந்ததா? எப்படி தாங்கிக்கொண்டார்கள்? என்று எதிர்கால சமுதாயம் வியப்பின் உச்சிக்கே சென்றுவிடும். உலகப் போரைவிட இந்த கொரோனா கொடியது. உலகப்போர் திட்டுத்திட்டாய் பாதிப்பை ஏற்படுத்தும். இது கொத்துக்கொத்தாய் உயிர்களை பறித்துவருகிறது.

கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் முதல் ஊரடங்கு மார்ச் 25 முதல் ஏப்ரல் 14-ந்தேதி வரை 21 நாட்களும், ஏப்ரல் 15 முதல் மே 3-ந்தேதி வரை 2-வது ஊரடங்கு 19 நாட்களும், 3-வது ஊரடங்கு மே 4 முதல் 17-ந்தேதி வரை 14 நாட்களும், 4-வது கட்ட ஊரடங்கு மே 18 முதல் 31-ந்தேதி வரையில் 14 நாட்களும், 5-வது கட்ட ஊரடங்கு ஜூன் 1 முதல் 30-ந்தேதி வரையில் 30 நாட்களும், 6-வது கட்ட ஊரடங்கு ஜூலை 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையில் 31 நாட்களும் என மொத்தம் 129 நாட்கள் ஊரடங்கினால் தமிழ்நாடு அப்படியே பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

தொழில்கள்வியாபாரம் முடங்கிவிட்டநிலையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டநிலையில், கொஞ்சநஞ்சம் இருந்த சேமிப்புகளும் கரைந்து கடன் வாங்கத்தொடங்கி இப்போது கடன் கொடுப்பாரும் இல்லாமல் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி நிற்கிறார்கள். மோட்டார் வாகனங்கள், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எல்லாவற்றின் உற்பத்தியும், விற்பனையும் மிகவும் குறைந்துவிட்டது. வரைபடத்தில் கொரோனா பாதிப்பு கோடு கீழே சென்றால்தான், மக்களின் வாழ்க்கைத்தர கோடு மேலே செல்லும்.

இந்தநிலையில், ஊரடங்கினால் பயனேதும் உண்டா? என்று சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏனெனில், ஒவ்வொரு ஊரடங்கும் அறிவிக்கும்போதும், கொரோனா பாதிப்பு குறைவதற்கு பதிலாக உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கம் ஊரடங்கு தளர்வு-3 என்று அறிவித்து, பல தளர்வுகளை அறிவித்துள்ளது. ஆனால், அந்தத் தளர்வுகளில் பல தமிழ்நாட்டில் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 7 நாட்களும் கடைகள் திறந்திருந்தால், எல்லா நாட்களும் மக்கள் கடைக்கு போவார்கள். ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், சனிக்கிழமை அன்றே காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள், மீன்இறைச்சி கடைகளில் சமூக இடைவெளியை மறந்து மக்கள் கூட்டம் கூட்டமாக நெருக்கியடித்துக் கொண்டு வாங்குவது, கொரோனா பரவலை இன்னும் அதிகரிக்கும். கடைகள் எல்லாம் இரவு 7 மணி வரை மட்டும் திறந்திருக்க அனுமதிக்கப்படும், ஓட்டல்களிலும் இரவு 7 மணி வரை வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தலைமைச்செயலகம் உள்பட அரசு அலுவலகங்களின் வேலை நேரம் மாலை 5.45 மணி என்று இருக்கும் நிலையில், அலுவலகத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்புபவர்கள், கடைக்கு செல்லவோ, ஓட்டல்களுக்கு சாப்பிடச்செல்லவோ, நிச்சயமாக 7 மணிக்குள் செல்லமுடியாது. எனவே, இந்த நேரத்தை கண்டிப்பாக நீட்டிக்க வேண்டும். மொத்தத்தில் ஊரடங்கை அறிவித்து, இவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்திருந்தும் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. 129 நாட்கள் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இப்படியே சென்று கொண்டிருக்கமுடியாது. எனவே, பொன் விதிகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி சோப்புபோட்டு கைகளை கழுவுதல் ஆகியவற்றை மக்கள் அனைவரும் எந்தவித மீறல் இல்லாமல் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை கடும் உத்தரவாக பிறப்பித்து மேலும் பல தளர்வுகளை அனுமதிக்கவேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறது. போதும் 129 நாட்கள் ஊரடங்கு. இப்படியே நீடித்துக் கொண்டிருந்தால் தமிழ்நாடு தாங்காது.

Next Story