விவசாயிகள் பெயரில் மோசடி


விவசாயிகள் பெயரில் மோசடி
x
தினத்தந்தி 9 Sep 2020 8:42 PM GMT (Updated: 2020-09-10T02:12:25+05:30)

தமிழ்நாட்டை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கும்வகையில் மிகப்பெரிய மோசடி தமிழ்நாட்டில் நடந்துள்ளது.

தமிழ்நாட்டை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கும்வகையில் மிகப்பெரிய மோசடி தமிழ்நாட்டில் நடந்துள்ளது. இடுபொருட்கள், உற்பத்தி செலவுகள் எல்லாம் உயர்ந்துள்ள நிலையில், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும், மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பாதிப்புக்குள்ளாகிவிடுவதாலும், விவசாயிகள் பெரும் இழப்பை ஆண்டுதோறும் சந்தித்து வருகிறார்கள். இதை மத்திய அரசாங்கம் உணர்ந்த காரணத்தால்தான், ஏதோ முழுமையாக உதவி செய்யாவிட்டாலும், ஒரு சிறிய உதவியாவது செய்வோம் என்ற எண்ணத்தில் “பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்” என்ற பெயரில் “பி.எம். கிசான்” என்று அழைக்கப்படும் விவசாயிகளுக்கான நிதி உதவித்திட்டத்தை 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. ஆண்டுக்கு 3 தவணைகளில் தலா ரூ.2 ஆயிரம் என்று ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கும் திட்டம் இது. அனைத்து விவசாயிகளுக்கும் இது பயனளிக்கும் திட்டம்.

தமிழ்நாட்டில் இந்த திட்டத்திற்காக மத்திய அரசாங்கம் இதுவரை ரூ.2,459 கோடி ஒதுக்கியுள்ளது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, தமிழ்நாட்டில் 39 லட்சம் விவசாயிகள்தான் இதில் இணைந்துள்ளனர். ஆரம்பத்தில் கிராம நிர்வாக அலுவலர்களிடம் இந்த திட்டத்தில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பங்கள் அளிக்கவேண்டும் என்று இருந்தது. தங்களிடம் உள்ள விவசாய நிலத்துக்கான ஆவணங்கள், ஆதார் எண், செல்போன் எண், வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றை கொடுக்கவேண்டியது இருந்தது. பின்பு இந்த விண்ணப்பங்களை விவசாயத்துறை அலுவலரிடம் வழங்கலாம் என்று மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு விவசாயிகளே இணையத்தளம் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்ற முறையை மத்திய அரசாங்கம் கொண்டுவந்தது. அவ்வாறு செய்யப்படும் விண்ணப்பங்களை விவசாயத்துறை அலுவலர் சரிபார்த்து, தகுதியானவர்தானா? என்பதை உறுதிசெய்து, உதவி இயக்குனர்கள் ஒப்புதல் வழங்கவேண்டும். இதற்காக அவர்களுக்கு தனியாக பாஸ்வேர்டு வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த சில மாதங்களாக 5½ லட்சத்திற்கும் மேற்பட்ட போலி விவசாயிகள் பெயர் இணைக்கப்பட்டு, அவர்கள் வங்கிக்கணக்குகளில் ரூ.110 கோடி வரவு வைக்கப்பட்டிருக்கும் பெரிய மோசடியை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை மாவட்டங்களில் இருந்து போலியாக விவசாயிகள் பெயர் இணைக்கப்பட்டு இந்த தொகை கையாடல் செய்யப்பட்டுள்ளது. உதவி இயக்குனர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை அவர்கள் வட்டார அளவில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்கள் கம்ப்யூட்டர் மையங்களுக்கு கொடுத்து சரிபார்க்க சொன்னதுதான் இந்த முழு மோசடிக்கு முதல் முக்கிய காரணமாகும்.

இப்போது சி.பி.சி.ஐ.டி. இந்த வழக்கை விசாரிக்கிறது. 80 பேர் அரசு பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 3 உதவி இயக்குனர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லுக்கு இறைக்க வேண்டிய தண்ணீர் இப்படி புல்லுக்குபோன செயலை, இந்த 13 மாவட்டங்களோடு மட்டுமல்லாமல், அனைத்து மாவட்டங்களிலும் விசாரிக்கவேண்டும். இதுவரை யார்-யாருக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது? என்பதை முழுஅளவில் ஆய்வு செய்யவேண்டும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்யும் முறையெல்லாம் விவசாயிகளுக்கு சரிவராது. இன்னும் ஏராளமான விவசாயிகள் இந்தத்திட்டத்தின் பயனை பெறத்தெரியாமல் இருக்கிறார்கள். பழைய முறைப்படி விண்ணப்பம் செய்யும் முறையை கிராம நிர்வாக அதிகாரிகள் பொறுப்பில் விடவேண்டும். ஒவ்வொரு கிராம நிர்வாக அதிகாரிகளிடமும் தங்கள் பகுதியில் விவசாயம் செய்பவர் யார்-யார்? என்ற பட்டியல் இருக்கும். அதை வைத்துக்கொண்டு அவரே, அவர்களோடு தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கும் முறையை எளிதாக்கி, எல்லா விவசாயிகளுக்கும் வழங்குவதே இதுபோன்ற மோசடிகள் நடக்காமல் இருப்பதற்கு சிறந்த வழியாகும் என்று விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

Next Story