புயல் வீசிய மாநிலங்களவை!


புயல் வீசிய மாநிலங்களவை!
x
தினத்தந்தி 22 Sep 2020 11:08 PM GMT (Updated: 2020-09-23T04:38:49+05:30)

நாடாளுமன்றத்தில், மாநில சட்டசபைகளில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் உறுப்பினர்கள் மாநிலங்களவையை அலங்கரிப்பார்கள். மாநிலங்களவையை “ஹவுஸ் ஆப் எல்டர்ஸ்”, அதாவது “மூத்தவர்கள் அவை” என்று கூறுவது வழக்கம்.

நாடாளுமன்றத்தில், மாநில சட்டசபைகளில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் உறுப்பினர்கள் மாநிலங்களவையை அலங்கரிப்பார்கள். மாநிலங்களவையை “ஹவுஸ் ஆப் எல்டர்ஸ்”, அதாவது “மூத்தவர்கள் அவை” என்று கூறுவது வழக்கம். நல்ல அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கும் அவை என்பதால், மாநிலங்களவையில் கூறப்படும் கருத்துகள் எல்லோராலும் கவனிக்கப்படும்.

இந்தநிலையில், பெரும் சர்ச்சைக்குள்ளாக்கிய வேளாண் மசோதாக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏற்கனவே இந்த இரு மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டன. இந்த மசோதாக்களை காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. பா.ஜ.க.வின் கூட்டணி மற்றும் தோழமை கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், பிஜூ ஜனதா தளம், சிரோமணி அகாலிதளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி போன்ற கட்சிகள் ஆதரவான நிலைப்பாட்டில் இல்லை. இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பவேண்டும் என்ற காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போன்ற கட்சிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. 2-வது கோரிக்கையான இந்த மசோதாக்கள் மீது ஓட்டெடுப்பு நடத்தவேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படாமல், குரல் வாக்கெடுப்பு மூலம் ஓட்டெடுப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நேரத்தில், அவையில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டன. திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், சபாநாயகர் இருக்கையில், துணைத்தலைவர் ஹரிவன்ஷ் உட்கார்ந்து இருந்த மேஜைக்கு முன்பு, மையப்பகுதிக்கு சென்று நாடாளுமன்ற விதிமுறைகள் புத்தகத்தை கிழித்துவீச முற்பட்டார். பெரும் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. சில உறுப்பினர்கள் மேஜை மீது ஏறி நின்றனர். அவையே போர்க்களம்போல இருந்தது. கடுமையான புயல் வீசியது. சமீபகாலங்களில் இதுபோன்று மாநிலங்களவையில் பெரிய அளவில் அமளி நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. தொடர் அமளியால் அவையை சிறிதுநேரம் ஒத்திவைத்த துணைத்தலைவர் ஹரிவன்ஷ், அவை மீண்டும் கூடியபோது குரல் ஓட்டெடுப்பில் 2 மசோதாக்களும் நிறைவேறியதாக அறிவித்தார்.

துணைத்தலைவர் மீது 12 கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்தன. அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. விதிகளின்படி, ஒரு உறுப்பினர் ஓட்டெடுப்பு கேட்டாலும் கண்டிப்பாக நடத்தவேண்டும். அதைமீறி இந்த 2 மசோதாக்களும் ஓட்டெடுப்பு நடத்தினால் தோற்றுப்போகும் என்பதை உணர்ந்தே, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றி விட்டதாக அறிவித்து விட்டார்கள் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இந்த நேரத்தில், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் 8 பேர் ஒருவார காலத்திற்கு சஸ்பெண்டு செய்யப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையாநாயுடு பின்னர் அறிவித்தார்.

அதன்பிறகு, அவையை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அவை நேற்று மீண்டும் கூடுவதாக ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட 8 உறுப்பினர்களும் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு புல்வெளியில் இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டனர். மிகவும் ஆச்சரியப்படத்தக்க விஷயமாக துணைத்தலைவர் ஹரிவன்ஷ், நேற்று காலையில் அவர்களுக்கு டீ கொண்டுவந்தார். அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். தானும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பதாக ஹரிவன்ஷ், வெங்கையாநாயுடுவுக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தொடரிலுள்ள மீதி நாட்களை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக குலாம்நபி ஆசாத் அறிவித்து அனைவரும் வெளியேறிய நிலையில், அவர்களோடு இந்த 8 உறுப்பினர்களும் வெளியே சென்றுவிட்டனர். இவ்வளவு அமளி, இவ்வளவு குழப்பங்கள், மைக் உடைப்பது, புத்தகங்களை கிழிக்க முற்பட்டது போன்ற விரும்பத்தகாத செயல்களை மூத்த உறுப்பினர்கள் இருக்கும் மாநிலங்களவையில் யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், தேர்வுக்குழுவுக்கு அனுப்பியிருந்தாலோ, வாக்கெடுப்பு நடத்தியிருந்தாலோ, இவ்வளவு குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது என்பதும் ஏற்புடையதுதான் என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது. 

Next Story