சென்னை ஐகோர்ட்டுக்கு கிடைத்த பெருமை!


சென்னை ஐகோர்ட்டுக்கு கிடைத்த பெருமை!
x
தினத்தந்தி 7 Dec 2020 9:30 PM GMT (Updated: 2020-12-08T01:10:53+05:30)

சென்னைக்கு சுற்றுலா பயணம் வரும் யாரும், பாரிமுனையிலுள்ள சென்னை ஐகோர்ட்டு கட்டிடத்தை பார்க்காமல் செல்வதில்லை.

“பெண்கள் எந்த அளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் என்பதை வைத்துத்தான் நான் சமுதாயத்தின் முன்னேற்றத்தை கணக்கிடுவேன்” என்று கூறினார், அண்ணல் அம்பேத்கர். அதை நிரூபிக்கும் வகையில், இப்போது 13 பெண் நீதிபதிகள் இருப்பது நீதித்துறையில் சென்னை ஐகோர்ட்டு அடைந்துள்ள முன்னேற்றத்தை காட்டுகிறது. சென்னைக்கு சுற்றுலா பயணம் வரும் யாரும், பாரிமுனையிலுள்ள சென்னை ஐகோர்ட்டு கட்டிடத்தை பார்க்காமல் செல்வதில்லை. கலை நயமிக்க இந்த கட்டிடம், கம்பீரமாக காட்சியளிப்பது, எல்லோருடைய மனதையும் கொள்ளை கொள்ளும்.

சென்னை ஐகோர்ட்டுக்கு நீண்டநெடிய பாரம்பரியம் உண்டு. 1862-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை ஐகோர்ட்டுக்கு, இப்போதுள்ள கட்டிடம் 1888-ல் கட்ட தொடங்கி, 1892-ம் ஆண்டு ஜூலை 12-ந்தேதி கட்டி முடிக்கப்பட்டு, அன்று முதல் இயங்கத்தொடங்கியது. ஆக ஐகோர்ட்டு கட்டிடம் கட்டி 128 ஆண்டுகள் ஆகிறது. புகழ்பெற்ற இந்த நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட பல தீர்ப்புகளை, இந்தியாவிலுள்ள பல நீதிமன்றங்களிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் மேற்கோள் காட்டுவது உண்டு. சட்ட ஞானமிக்க பல நீதிபதிகளாலும், அவர்கள் பிறப்பித்த பல தீர்ப்புகளாலும், பல புதிய வரலாறுகள் படைக்கப்பட்டது உண்டு.

இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் முதல் திருத்தம் 1951-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதற்கு காரணமும், இந்த ஐகோர்ட்டின் தீர்ப்புதான். இந்தியர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுப்பதற்கே அஞ்சிய ஆங்கிலேயர்கள், 1877-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டின் முதல் இந்திய நீதிபதியாக டி.முத்துசாமி அய்யரை நியமித்தனர். அவர், 1877 முதல் 1895 வரை பதவி வகித்தார். இடையில் 1893-ல் வெள்ளைக்கார தலைமை நீதிபதி ஓய்வு பெற்றபோது, சிறிது காலம் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார். இப்படி இந்திய நீதித்துறையில் சென்னை ஐகோர்ட்டு அசைக்கமுடியாத கவுரவத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

பல பெருமைகளை உருவாக்கிய சென்னை ஐகோர்ட்டு, இப்போது மேலும் ஒரு புதிய பெருமை படைத்துள்ளது. தற்போது, சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் பணியிடம் 75 ஆகும். அதில் 53 நீதிபதிகள் இருந்தனர். இப்போது, மாவட்ட நீதிபதிகளாக இருந்த 10 நீதிபதிகள், பதவி உயர்வு பெற்று கடந்த வாரம் பொறுப்பு ஏற்றனர். இதில், நீதிபதிகள் எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகிய 4 பெண் நீதிபதிகளும் அடங்குவர். ஏற்கனவே, ஐகோர்ட்டில், 9 பெண் நீதிபதிகள் இருக்கும்நிலையில், தற்போது 4 பெண் நீதிபதிகள் பதவி ஏற்றதன் மூலம், 13 பெண் நீதிபதிகள் ஐகோர்ட்டை அலங்கரிக்கின்றனர். இந்தியாவிலேயே சென்னை ஐகோர்ட்டில்தான் அதிக பெண் நீதிபதிகள் உள்ளனர் என்ற பெருமை கிடைத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் ஒரேநேரத்தில் கணவன்-மனைவி, அதாவது நீதிபதி முரளிசங்கரும், நீதிபதி தமிழ்ச்செல்வியும் மாவட்ட நீதிபதி பதவியில் இருந்து பதவி உயர்வு பெற்று ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட தம்பதி ஆவார்கள்.

இந்திய வரலாற்றில், கடந்த ஆண்டுதான் பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் கணவன்-மனைவியான விவேக் பூரியும், அர்ச்சனா பூரியும் நீதிபதிகளாக ஒரே நேரத்தில் பதவி ஏற்றனர். அந்தவகையில், சென்னை ஐகோர்ட்டில் தான் 2-வது முறையாக கணவன்-மனைவி ஒரே நேரத்தில் நீதிபதிகளாகி உள்ளனர். நீதிபதி முரளிசங்கரும், தமிழ்ச்செல்வியும்தான் வயதில் இளையவர்கள். அவர்கள், 2 ஆண்டுகள் கழித்து நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு, அதன்பிறகு 10 ஆண்டுகள் ஐகோர்ட்டு நீதிபதிகளாக இருப்பார்கள். சென்னை ஐகோர்ட்டில் இன்னும், 12 நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும். அவர்களிலும் பல பெண் நீதிபதிகள் இடம்பெறவேண்டும் என்பது, பெண் வக்கீல்களின் கோரிக்கையாகும். சென்னை ஐகோர்ட்டில் 13 பெண் நீதிபதிகள் இருப்பது, அதன் புகழ் மகுடத்தில் பதிக்கப்பட்ட மற்றொரு வைரக்கல்லாகும். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்போது, இந்திய நீதித்துறையின் புகழ் உச்சிக்கு நம் ஐகோர்ட்டு செல்வது திண்ணம்.

Next Story