கொரோனா ஒழிப்பு பணியில் ஒன்றிணைவோம்!


கொரோனா ஒழிப்பு பணியில் ஒன்றிணைவோம்!
x
தினத்தந்தி 20 April 2021 6:54 PM GMT (Updated: 20 April 2021 6:54 PM GMT)

கடந்த 6-ந்தேதி தமிழக சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டது. இனி மே 2-ந்தேதிதான் வாக்கு எண்ணிக்கை முடிந்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டை ஆளப்போவது யார்? என்பது தெரியவரும்.

கடந்த 6-ந்தேதி தமிழக சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டது. இனி மே 2-ந்தேதிதான் வாக்கு எண்ணிக்கை முடிந்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டை ஆளப்போவது யார்? என்பது தெரியவரும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் முடிந்த அடுத்த நாளே கொரோனா தடுப்புப் பணியில் மிகத்தீவிரமாக ஈடுபட தொடங்கினார். “தேர்தல் முடிவுக்காக காத்திருக்காமல் கொரோனா ஒழிப்பு பணியில் தி.மு.க. தொண்டர்கள் ஈடுபட வேண்டும்” என்று 8-ந்தேதியே கோரிக்கை விடுத்தார்.

“கொரோனா 2-வது அலை குறித்து மருத்துவர்களும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் எச்சரிக்கை செய்திருப்பதால், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள். மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குங்கள். வாய்ப்புள்ள இடங்களில் முககவசம், சானிடைசர் வழங்குங்கள்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால், அந்த நேரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, வேட்பாளர்களாக போட்டியிட்டவர்கள் இந்த பணியில் ஈடுபட முடியாதநிலை இருந்தது. எனவே, தி.மு.க. சார்பிலும், அ.தி.மு.க. சார்பிலும் தேர்தல் ஆணையத்திடம் இதுபோன்ற பணிகளுக்காக அனுமதி கோரப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் கடந்த 18-ந்தேதி விடுத்த அறிக்கையில், “தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று, கொரோனா தடுப்பு பணியில் ஒரு அங்கமாக, கபசுர குடிநீர் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட ஆட்சேபனை இல்லை என்று தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருப்பதால், தி.மு.க. வேட்பாளர்களும், மாவட்ட செயலாளர்களும் கபசுர குடிநீர் வழங்கும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டு, கொரோனா 2-வது அலையில் இருந்து மக்களை காப்பாற்றிட தீவிர பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதே நாளில், பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில், “கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழ்நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவை உடனடியாக மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும். தமிழக அரசால் கேட்கப்பட்டுள்ள 20 லட்சம் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக அனுப்ப வேண்டும். தமிழக மக்கள்தொகைக்கு ஏற்ப ‘கோவேக்சின்’ மற்றும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்துகளை அதிக அளவு வழங்க வேண்டும். மேலும், மாநில அரசுகளே சுதந்திரமாக மருந்துகளையும், தடுப்பூசிகளையும், மருத்துவ உபகரணங்களையும் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி தலைவர் என்ற முறையில், அவர் எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது. தமிழக அரசுக்கு வலுவூட்டும் வகையிலும் அமைந்துள்ளது. தற்போது, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மே மாதம் 1-ந்தேதி முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதேநேரத்தில், தடுப்பூசி மருந்து நிறுவனங்கள், தங்களுடைய 50 சதவீத தயாரிப்பை மாநில அரசுகளுக்கும், வெளிச்சந்தையிலும் விற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருக்கிறது. இதனால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி மருந்து போடப்படுமா?, அல்லது கட்டணம் கட்ட வேண்டுமா? என்பதை அமையப்போகும் புதிய அரசுதான் முடிவு செய்யவேண்டும்.

என்றாலும், இப்போது தமிழக அரசுக்கு இருக்கும் கடுமையான நிதி நெருக்கடியில் இந்த சுமையை நிச்சயமாக தாங்கமுடியாது. எனவே, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்துகளை போடுவதற்கான செலவை மத்திய அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மற்றொரு பக்கம், “மக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம் வழங்கும் பணியை தி.மு.க. தொண்டர்கள் தொடங்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கூறியதுபோல, அனைத்து கட்சி தலைவர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மிகப்பெரிய அளவில் வழங்குவதற்கு முன்வர வேண்டும். அரசியலை மறந்து, மற்ற வேறுபாடுகளை மறந்து கொரோனா ஒழிப்பு பணியில் எல்லோரும் ஒன்றிணைந்தால் நிச்சயமாக கொரோனாவை விரைவில் விரட்டிவிடலாம்.

Next Story