இப்படியே உயர்ந்து கொண்டு போனால் எப்படி தாங்குவது?


இப்படியே உயர்ந்து கொண்டு போனால் எப்படி தாங்குவது?
x
தினத்தந்தி 3 Jun 2021 8:01 PM GMT (Updated: 2021-06-04T01:31:59+05:30)

கொரோனா பாதிப்பு காரணமாக வருமான இழப்பு, வருமானம் குறைவு என எல்லோருமே அன்றாட செலவுகளை சமாளிப்பதற்கு திக்குமுக்காடி கொண்டிருக்கும் நிலையில், விலைவாசி உயர்வு திகைக்க வைக்கிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக வருமான இழப்பு, வருமானம் குறைவு என எல்லோருமே அன்றாட செலவுகளை சமாளிப்பதற்கு திக்குமுக்காடி கொண்டிருக்கும் நிலையில், விலைவாசி உயர்வு திகைக்க வைக்கிறது. இதில் பெட்ரோல், டீசல் விலைஉயர்வை பார்த்தால், கடந்த மாதத்தில் மட்டும் 17 முறை உயர்ந்திருக்கிறது. இந்த மாதம் 1-ந்தேதியும் உயர்ந்து, தன் கணக்கை தொடங்கிவிட்டது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் டீசல் 90 ரூபாய் 12 காசுக்கும், பெட்ரோல் 95 ரூபாய் 99 காசுக்கும் விற்பனையானது. நல்ல வேளையாக ஊரடங்கு இருப்பதால் பொதுமக்கள் இருசக்கரம், கார் போன்ற வாகனங்களை அதிகம் பயன்படுத்தாததால் இப்போது அந்த வலி தெரியவில்லை. ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டப்பிறகு, மக்களால் இதை தாங்கிக்கொள்ளவே முடியாது. சரக்கு வாகனங்களுக்கு டீசல் விலை உயர்வு என்பது எல்லா பொருட்களின் விலையையும் மேலும் உயர்த்துவதற்கான வாசலை திறந்துவிடும்.

பயிர்சாகுபடி தொடங்கும் இந்த நேரத்தில் விவசாயிகளுக்கும், உழவு மோட்டார், டிராக்டர் பயன்பாட்டில் டீசல் விலை உயர்வு என்பது சாகுபடி செலவையும் உயர்த்த வகைசெய்துவிடும். ஆக எந்தப்பக்கம் திரும்பினாலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை பாதிக்கத்தான் செய்யும். ஆனால் அரசுக்கு இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் கடந்த நிதியாண்டில் நல்லவருமானம் கிடைத்திருக்கிறது. 2019-20-ம் நிதியாண்டில் பெட்ரோல், டீசல் மீதான கலால்வரி வசூலால் ரூ.2.2 லட்சம் கோடி வருவாய் மத்தியஅரசுக்கு கிடைத்திருக்கிறது. கடந்த மார்ச் மாதத்தோடு முடிந்த 2020-21-ம் நிதியாண்டில் ரூ.3.9 லட்சம் கோடி வருவாய் கிடைத்திருக்கிறது. இவ்வளவுக்கும் பொதுமக்கள் பெட்ரோல், டீசல் வாங்கிய அளவு கடந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் 10.6 சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் மட்டும் கலால்வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.13-ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.16-ம் உயர்ந்துள்ளது. இப்போது கலால் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32 ரூபாய் 90 காசும், டீசலுக்கு 31 ரூபாய் 80 காசும் வசூலிக்கப்படுகிறது.

பெட்ரோல் விலையில் மத்திய அரசாங்கத்தின் கலால்வரி, மாநில அரசாங்கத்தின் மதிப்புக்கூட்டு வரி, விற்பனையாளர் கமிஷன் போன்றவை 3-ல் 2 பங்கு இருக்கிறது. மத்திய அரசாங்கம், மாநில அரசை பார்த்து நீங்கள் வரியை குறையுங்கள் என்கிறது. மாநில அரசு, மத்திய அரசாங்கத்தை பார்த்து நீங்கள் வரியை குறையுங்கள் என்கிறது. இருவருமே இப்படி ஒருவரையொருவர் நீங்கள் குறையுங்கள்... நீங்கள் குறையுங்கள்... என்று சொல்வதை விட்டுவிட்டு பெட்ரோல், டீசலை சரக்கு சேவைவரி வளையத்துக்குள் கொண்டுவந்து அதற்கு அதிகபட்சவரியாக 28 சதவீதம் வரியையும், வேண்டுமானால் இந்த கொரோனா காலத்தில் மட்டும் கொரோனா ‘செஸ்’ அதாவது கொரோனா மேல்வரி என்று மட்டும் வசூலிக்கலாம் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. அரசுக்கு ஏற்படும் வருமானஇழப்பை சரிகட்ட சாதாரண ஏழை-எளிய, நடுத்தர மக்களை பாதிக்காமல் வேறு எந்த பொருட்கள்மீது வரியை கூட்டலாம் என்பதை மத்தியஅரசு பரிசீலிக்கவேண்டும். இப்போது மத்திய அரசாங்கத்துக்கும் பணம் நிச்சயம் தேவை. பொருளாதார நிபுணரான நோபல்பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, ‘அரசாங்கம் தன் தேவைக்காக பணம் அச்சடிக்கலாம், பலநாடுகள் இப்போது அந்த வழியைத்தான் பின்பற்றி இருக்கிறது’ என்று ஆலோசனை கூறியுள்ளார். முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் கூட இந்த கருத்தையே வலியுறுத்தியுள்ளார். எனவே மத்திய அரசாங்கம் உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க என்னென்ன வழிகள் மேற்கொள்ளலாம்? என்று, பொருளாதார, நிதி நிபுணர்கள் போன்றவர்களை கலந்தாலோசித்து உடனடியாக நல்ல முடிவெடுக்கவேண்டும். இவ்வளவு பெட்ரோல், டீசல் விலை உயர்வை பொதுமக்களால் நிச்சயமாக தாங்கமுடியாது.

Next Story