உயர்கல்வியில் உச்சநிலைக்கு செல்லும் தமிழ்நாடு!


உயர்கல்வியில் உச்சநிலைக்கு செல்லும் தமிழ்நாடு!
x
தினத்தந்தி 17 Jun 2021 7:15 PM GMT (Updated: 2021-06-18T00:45:02+05:30)

சரித்திர காலம் தொடங்கி தமிழ்நாடு கல்வியில் மிகச் சிறந்து விளங்கியிருக்கிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தாணியால் 1,330 திருக்குறள்களை வடித்துத்தந்த அய்யன் திருவள்ளுவர், கல்விக்கென தனி அதிகாரத்தை வைத்துள்ளார். மகாகவி பாரதியார்கூட, “கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்று பாடியுள்ளார்.

சுதந்திர இந்தியாவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை நடத்திய முதல்-அமைச்சர்கள் அனைவருமே கல்விக்கு அதிகமான முக்கியத்துவத்தை கொடுத்தார்கள். பெருந்தலைவர் காமராஜர் பட்டித்தொட்டியெல்லாம் பள்ளிக்கூடங்களை திறக்கச்செய்தார். அவரைத் தொடர்ந்து, அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, இப்போது மு.க.ஸ்டாலின் என எல்லோருடைய பார்வையுமே கல்வி வளர்ச்சி மீது, தனிப்பார்வையாக விழுந்துள்ளது. நமது தலைவர்கள் அனைவரும் எடுத்த முயற்சியால், அவர்கள் விதைத்த வித்துக்களால், இன்று உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் தனிப்பெருமையை அடைந்துள்ளது.

2019-2020-ம் ஆண்டுக்கான உயர்கல்வி தொடர்பான அகில இந்திய கணக்கெடுப்பில், நாடு முழுவதும் சராசரியாக 27.1 சதவீதம் மாணவர்கள் உயர்கல்விக்கு சென்றிருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அதற்கு இருமடங்காக 51.4 சதவீதம் மாணவர்கள் கல்லூரிகளில் உயர்கல்விக்காக சேர்ந்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இது 75.8 சதவீதத்தை பெற்ற சிக்கிம் மாநிலத்தையும், 52.1 சதவீதத்தை பெற்றுள்ள சண்டிகர் மாநிலத்தையும் அடுத்து 3-வது இடத்தில்தான் தமிழ்நாடு இருக்கிறது என்றாலும், அதுவெல்லாம் சின்னஞ்சிறிய மாநிலங்கள் என்றவகையில் நிச்சயமாக அதோடு ஒப்பிட முடியாது.

2019-2020-ம் ஆண்டில் 18 முதல் 23 வயது வரையிலான இளைய சமுதாயத்தின் மக்கள்தொகை, தமிழ்நாட்டில் 68.5 லட்சமாகும். இவர்களில் 35.2 லட்சம் பேர் உயர்கல்விக்கு சென்றிருக்கிறார்கள் என்றால், நிச்சயமாக தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாகும். குறிப்பிடத்தக்க உயர்வு எதுவென்றால், தாழ்த்தப்பட்ட, மலைவாழ் இனத்தை சேர்ந்த மாணவர்கள், பெண்கள் அதிகம் பேர் சேர்ந்திருக்கிறார்கள். இதுபோல, ஆராய்ச்சி படிப்பான பி.எச்.டி. பட்டம் பெறுவதற்கான மாணவர் பதிவும் இந்த ஆண்டில் அதிகரித்திருக்கிறது. 2018-2019-ல் 25,820 மாணவர்கள் பி.எச்.டி. பட்டம்பெற பதிவு செய்துள்ள நிலையில், 2019-2020-ல் 15,828 ஆண்களும், 14,832 பெண்களும் என்று 30,660 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு செல்ல வேண்டுமென்றால் பி.எச்.டி. பட்டம் பெற்றிருக்கவேண்டும் என்ற வழிமுறையும் இதற்கு ஒரு காரணமாகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 2,610 கல்லூரிகள் இருக்கிறது. இதில், தனியார் நிர்வாகத்திலுள்ள கல்லூரிகள் 77.6 சதவீதம் ஆகும். ஆக, கல்வி வளர்ச்சியில், தமிழக அரசை பாராட்டும் அதே நேரத்தில், தனியார் பங்களிப்பையும் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த நேரத்தில், கல்வியாளர்களின் பொதுவான கருத்து என்னவென்றால், உயர் கல்வியில் கல்வித்தரம் இன்னும் அதிகமாக உயர்த்தப்படவேண்டும். ஏனெனில், இப்போதுள்ள வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகளில் எல்லாம் அதிகமான தரத்தை எதிர்பார்க்கிறார்கள். மேலும், ஆண்டுதோறும் இவ்வளவு மாணவர்கள் படித்து முடித்து வெளியே வரும்போது அவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் பெருமளவில் கிடைக்கவேண்டும். எனவே, வேலைவாய்ப்புகளை பெருக்குவதிலும் அரசு முனைப்பு காட்டுவதோடு, தனியார் பங்களிப்பையும் ஊக்கப்படுத்த, அவர்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகள், மானியங்கள் வழங்கவேண்டும்.

அரசின் பல சலுகைகள், அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. அதை சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் கிடைப்பதற்கான வழிமுறைகளை காணவேண்டும். அரசு கல்லூரியில் படித்தாலும் மாணவர்கள்தான், சுயநிதி கல்லூரிகளில் படித்தாலும் மாணவர்கள்தான் என்ற வகையில், எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சலுகைகளை வழங்கவேண்டும்.

கல்வி வளர்ச்சியில் உச்சநிலைக்கு சென்று கொண்டிருக்கும் தமிழ்நாடு, இன்னும் மென்மேலும் உயர்ந்து, உலகமே தமிழ்நாட்டை வியந்து பார்க்கும் நிலை உருவாகவேண்டும் என்பதுதான் கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story