பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய மு.க.ஸ்டாலின்!


பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய மு.க.ஸ்டாலின்!
x
தினத்தந்தி 23 Aug 2021 8:59 PM GMT (Updated: 23 Aug 2021 8:59 PM GMT)

ஆட்சி பொறுப்பை ஏற்று 100 நாட்கள் ஆன நிலையில், பல வரலாற்று சிறப்பு மிகுந்த திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியிருந்தாலும், தந்தை பெரியார், தன் இறுதி காலத்தில் நடத்திய போராட்டத்துக்கு ஒரு விடிவை கண்டிருக்கிறார்.

ஆட்சி பொறுப்பை ஏற்று 100 நாட்கள் ஆன நிலையில், பல வரலாற்று சிறப்பு மிகுந்த திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியிருந்தாலும், தந்தை பெரியார், தன் இறுதி காலத்தில் நடத்திய போராட்டத்துக்கு ஒரு விடிவை கண்டிருக்கிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ், திருக்கோவில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்று தேர்வு செய்யப்பட்ட அனைத்து சாதிகளையும் சேர்ந்த 24 அர்ச்சகர்கள், இதர பாடசாலையில் பயிற்சி பெற்ற 34 அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள், ஒரு பெண் ஓதுவார் உள்பட 20 ஓதுவார்கள் என்பதோடு மட்டுமல்லாமல், மேலும் பல பணியாளர்களை சேர்த்து 208 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி அரும் சாதனை புரிந்துள்ளார். அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கியதோடு மட்டுமல்லாமல், ஒரு பெண்ணையும் ஓதுவாராக நியமித்து பெண்களுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளார்.

எல்லா சமூக நீதிகளுக்கும் வித்திட்டவர் தந்தை பெரியார் என்ற வகையில், இதற்கென முதலில் போராட்ட அறிவிப்பை வெளியிட்டது அவர்தான். 20-10-1969-ல் கர்ப்பக்கிரக நுழைவு கிளர்ச்சியை அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அப்போது முதல்-அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி 17-1-1970 அன்று, “இதற்கென விதி உருவாக்குவது குறித்து அரசு யோசித்து கொண்டிருக்கிறது” என்று அறிவித்தார். தந்தை பெரியார் இதில் மிக உறுதியாக இருந்தார். முதல்-அமைச்சர் கருணாநிதி நேரில் சென்று பெரியாரிடம், “நீங்கள் போராட்டம் நடத்த வேண்டாம், நாங்கள் சட்டம் இயற்றி அதை நிறைவேற்றுகிறோம்” என்று கூறி, போராட்டத்தை ஒத்திவைக்க செய்தார்.

மீண்டும் 1973-ம் ஆண்டு டிசம்பர் மாதம், இதற்காக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக தந்தை பெரியார் அறிவித்தார். ஆனால், அவர் டிசம்பர் 24-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தபோது, கலைஞர் கருணாநிதி பேசுகையில், “அய்யா அவர்களை அரசு மரியாதையோடு புதைக்கிறோம். என்றாலும் கூட அவரது நெஞ்சில் இருக்கும் முள்ளை எடுத்து புதைக்க முடியவில்லையே” என்று ஆதங்கப்பட்டார். அதன்பிறகு, அன்னை மணியம்மையார், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் தள்ளாத வயதில், அதாவது 95-வது வயதில் தன் இறுதி காலக்கட்டத்தில் பெரியார் உறுதியோடு நின்ற, அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்க வேண்டும் என்ற கொள்கையை நிறைவேற்ற, பல்வேறு வகைகளில் முயற்சிகளை மேற்கொண்டனர்.

தி.மு.க. ஆட்சி வந்தபோதெல்லாம் முதல்-அமைச்சர் கருணாநிதி இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க தவறியதே இல்லை. இதற்காக, சட்டம் நிறைவேற்றினார். அரசியல் சட்டத்தை திருத்த தீர்மானம் நிறைவேற்றினார். அவரும் தன் இறுதிகாலம் வரை முழு முயற்சி எடுத்தார். முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் என்று எல்லோரும் இந்த நோக்கம் நிறைவேற பாடுபட்டனர். பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர்.

கால்பந்து விளையாட்டு போட்டியில் எல்லா வீரர்களும், தங்களால் இயன்ற வரை பந்தை கடத்தி சென்றாலும், இறுதியில் லாவகமாக கோல் அடித்து வெற்றி கோப்பையை பெற காரணமாக இருப்பவர் ஒருவர்தான் என்பதுபோல, எல்லோருடைய முயற்சிகளுக்கு பிறகும், அதை நிறைவேற்றியது மு.க.ஸ்டாலின்தான்.

1969-ல் பெரியாரை நேரில் சந்தித்து, போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுக்க, எந்த பெரியார் திடலுக்கு கலைஞர் கருணாநிதி சென்றாரோ, அதேபோல மு.க.ஸ்டாலினும் பெரியார் திடலுக்கு சென்று, கி.வீரமணியை சந்தித்து, “பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிவிட்டோம்” என்று பூரிப்புடன் கூறினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமையை பெற்றுத்தந்து, சமூக நீதிக்கான முக்கிய நகர்வுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரணமாகிவிட்டார். திராவிட அரசியலின் அடுத்த அத்தியாயத்தை தொடங்கிவிட்டார்.

Next Story