பரபரப்பை ஏற்படுத்தும் பண்டோரா புலனாய்வு அறிக்கை!


பரபரப்பை ஏற்படுத்தும் பண்டோரா புலனாய்வு அறிக்கை!
x
தினத்தந்தி 5 Oct 2021 8:11 PM GMT (Updated: 5 Oct 2021 8:11 PM GMT)

உலகில் நீண்ட நெடுங்காலமாகவே ஏதாவது ஒரு ரகசியத்தை அல்லது ஊழலை ஒரு தனி நபரோ அல்லது அரசியல் கட்சிகளோ அல்லது ஏதாவது அமைப்புகளோ வெளியிட்டால், அவர்கள் பண்டோரா பெட்டியை திறந்துவிட்டார்கள் என்று சொல்வார்கள்.

உலகில் நீண்ட நெடுங்காலமாகவே ஏதாவது ஒரு ரகசியத்தை அல்லது ஊழலை ஒரு தனி நபரோ அல்லது அரசியல் கட்சிகளோ அல்லது ஏதாவது அமைப்புகளோ வெளியிட்டால், அவர்கள் பண்டோரா பெட்டியை திறந்துவிட்டார்கள் என்று சொல்வார்கள். எல்லோருக்குமே பண்டோரா என்ற வார்த்தையை எதற்காக குறிப்பிடுகிறார்கள்? என்பது புரியாத புதிராக இருக்கும். ஆனால், அந்த வார்த்தைக்கும் ஒரு புராணம் இருக்கிறது. கிரேக்க நாட்டு நம்பிக்கைகளில் பண்டோரா என்பது உலகின் முதல் பெண் தெய்வமாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில், எல்லா கடவுள்களுக்கும் கடவுளான சியூஸ் என்ற கடவுள் பண்டோரா என்ற அந்த பெண் தெய்வத்துக்கு ஒரு ஜாடியை பரிசாக கொடுத்து, “இதை நீ எப்போதுமே திறக்கக்கூடாது” என்று கூறினாராம். ஆனால் அதைமீறி, பண்டோரா பெண் தெய்வம் அந்த ஜாடியை திறந்துவிட்டதாம். அப்போது, அந்த ஜாடிக்குள் அடைபட்டுக்கிடந்த அனைத்து தீமைகளும் வெளியேறி உலகம் முழுவதும் பரவிவிட்டன என்பது கிரேக்க நாட்டு ஐதீகம்.

அதை வைத்துத்தான் இப்போது பண்டோரா பேப்பர்ஸ் என்று கூறப்படும் புலனாய்வு அறிக்கை வெளிவந்துள்ளது. சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலகில் புகழ்பெற்ற வாஷிங்டன் போஸ்ட், கார்டியன் போன்ற பல பத்திரிகைகளில் பணியாற்றும் 600-க்கும் மேற்பட்ட புலனாய்வு பத்திரிகையாளர்கள், 14 சர்வதேச நிதி சேவை நிறுவனங்களிடம் இருந்து திரட்டிய 1 கோடியே 19 லட்சம் ஆவணங்களை கொண்ட அறிக்கைதான் இந்த பண்டோரா பேப்பர்ஸ் புலனாய்வு அறிக்கை ஆகும். இந்த அறிக்கையில், தற்போதும், இதற்கு முன்பும் உள்ள 35 தேசிய அளவிலான தலைவர்கள், 330-க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான செல்வந்தர்கள் வெளிநாடுகளில் முறைகேடாக மேற்கொண்ட முதலீடுகளை வெளியிட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

இவர்கள் எல்லாம் 90 நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரமுகர்கள் ஆவார்கள். பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், பனாமா, ஹாங்காங், ஆப்பிரிக்காவின் செசல்ஸ் தீவு, சிங்கப்பூர், துபாய், நியூசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பல நாடுகளில், அங்கு கிடைக்கும் வரிச் சலுகைகளை பயன்படுத்தி இந்த முதலீடுகளை முறைகேடாக செய்திருக்கிறார்கள் என்பது அவர்கள் குற்றச்சாட்டு. இந்த அறிக்கையில் ஜோர்டான் மன்னர், செக் குடியரசின் பிரதமர், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவர் மந்திரி சபையில் உள்ள மந்திரிகள், ரஷிய அதிபர் புதின் என்று பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் அனில் அம்பானி, வினோத் அதானி, ஜாக்கிஷெராப், பெண் தொழிலதிபர் கிரண் மஜூம்தார் ஷா, நீரா ராடியா மற்றும் சதீஷ் சர்மா, சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் உள்பட 300 பெயர்கள் இந்த அறிக்கையில் இருக்கின்றன. சச்சின் தெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி மற்றும் மாமனார் பெயரில் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் முதலீடு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சச்சின் தரப்பில் வெளிவந்த அறிக்கையில், “அனைத்து முதலீடுகள் பற்றிய தகவல்களும் வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்தவித சட்டவிதி மீறலும் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. தொழிலதிபர் கிரண் மஜூம்தார் கணவர் மேற்கொண்ட முதலீடுகளும் சட்டப்பூர்வமானது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை, முதலீடுகள் குறித்த விவரமாகத்தான் இருக்கிறதே தவிர, சட்டப்பூர்வமானதா?, முறைகேடானதா? என்பதை விசாரிக்க அரசு நியமித்துள்ள கூட்டுக்குழு விசாரணைக்கு பிறகுதான் தெரியும். அதுவரை இதையொரு தகவலாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர, முறைகேடாகவோ, குற்றச்சாட்டாகவோ எடுத்துக்கொள்ளமுடியாது. வெளிநாடுகளில் இந்தியர்கள் முதலீடு செய்வதை தடுக்கவேண்டுமென்றால், உள்நாட்டில் அவர்கள் முதலீடுகளுக்கு வரி சலுகைகளும், ஊக்கமும் அளிக்கவேண்டும். முதலீடுகளுக்கு உரிய பலன் இந்தியாவிலேயே கிடைத்தால், ஏன் தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்? என்பது பரிசீலிக்க வேண்டிய ஒன்றாகும்.

Next Story