முதல்-மந்திரியாக, பிரதமராக நரேந்திரமோடியின் 20 ஆண்டுகள்!


முதல்-மந்திரியாக, பிரதமராக நரேந்திரமோடியின் 20 ஆண்டுகள்!
x
தினத்தந்தி 7 Oct 2021 7:44 PM GMT (Updated: 2021-10-08T01:14:14+05:30)

நீண்ட நெடுங்காலமாக அரசியலில் பயணம்செய்த, பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திரமோடி குஜராத் முதல்-மந்திரியாக, இந்திய நாட்டின் பிரதமராக ஒரு புகழ்மிக்க அத்தியாயத்தை தொடங்கி நேற்றுடன் 20 ஆண்டுகளாகிறது.

நீண்ட நெடுங்காலமாக அரசியலில் பயணம்செய்த, பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திரமோடி குஜராத் முதல்-மந்திரியாக, இந்திய நாட்டின் பிரதமராக ஒரு புகழ்மிக்க அத்தியாயத்தை தொடங்கி நேற்றுடன் 20 ஆண்டுகளாகிறது. சமீபத்தில் நடந்த ஐ.நா. பொதுசபைக்கூட்டத்தில் நரேந்திரமோடி சொன்னதுபோல, ரெயில்நிலையத்தில் தன் தந்தைக்கு உதவியாக ‘டீ’ விற்ற ஒரு சிறுவன் நாட்டின் பிரதமராக ஐ.நா.சபையில் பேசமுடிகிறதென்றால், அதுதான் இந்திய ஜனநாயகத்தின் வலிமை. சிறுவயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் கொள்கைகளில் பெரிதும் ஈர்ப்புக்கொண்டு, ஒரு தொண்டராக தன் வாழ்க்கையை தொடங்கிய நரேந்திரமோடி, 2001-ம்ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி குஜராத் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.

அப்போதிருந்து நான்கு முறை 12 ஆண்டுகளுக்கு மேல் குஜராத் முதல்-மந்திரியாக பதவிவகித்து, குஜராத் வரலாற்றிலேயே நீண்டகாலம் முதல்-மந்திரி பொறுப்பை வகித்தவர் நரேந்திரமோடிதான் என்ற அழியாத முத்திரையை பதித்துவிட்டு பிரதமர் பொறுப்பை ஏற்றார். முதல்-மந்திரி பொறுப்பிலிருந்து நேரடியாக பிரதமரான பா.ஜ.க. முதல்-மந்திரி அவர்தான். அவர் குஜராத் முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற நேரம் மிகவும் துயரமான நேரமாகும். குஜராத்தில் பேரழிவை ஏற்படுத்திச்சென்ற பூகம்பத்திலிருந்து மறுவாழ்வை நோக்கி கொண்டுசெல்லவேண்டிய மிகப்பெரிய பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். தொழில்வளர்ச்சி, ஏற்றுமதியில் அக்கறை செலுத்தினார். இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் குஜராத்தின் பங்களிப்பை 22 சதவீதமாக உயர்த்திய பெருமை நரேந்திரமோடியையே சாரும்.

ஆனால் 2002-ம்ஆண்டு கோத்ரா வன்முறையும், அவர் பதவியேற்ற சில மாதங்களில்தான் நடந்தது. அதைத்தொடர்ந்து ஒரு அமைதியான சூழ்நிலையை, மத ஒற்றுமையை ஏற்படுத்தும் பெரிய பொறுப்பையும் அவர் தலையில் சுமந்தார். கோத்ரா சம்பவத்தின் வடுக்கள் அழிய நீண்டநாட்கள் ஆனாலும், அந்தசம்பவத்தில் இருந்து ஒரு அமைதியான சூழ்நிலையை நரேந்திரமோடி உருவாக்கினார் என்பதில் மட்டும் சந்தேகமேயில்லை. இத்தகைய சூழ்நிலையில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக 2014-ம்ஆண்டு நடந்த தேர்தலில் நரேந்திரமோடி முன்னிறுத்தப்பட்டார். இந்தத்தேர்தலில் 282 இடங்களில் பா.ஜ.க.வும், 336 இடங்களில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் வெற்றிபெற்றது. தொடர்ந்து 2019-ம்ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 303 இடங்களிலும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களிலும் வெற்றிபெற்று, மகத்தான வெற்றிபெற்ற பா.ஜ.க. கூட்டணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

தனியாக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றாலும், தன் கூட்டணி கட்சிகளையும் மந்திரி சபையில் சேர்க்க நரேந்திரமோடி தவறவில்லை. தமிழ்நாட்டின் மீது எப்போதுமே நரேந்திரமோடிக்கு ஒரு தணியாத பாசம் உண்டு. சமீபத்தில் நடந்த ‘ஜல்ஜீவன்’ காணொலிக்காட்சி கூட்டத்தில்கூட, ‘தமிழகத்தை நான் எப்போதுமே கவுரவமாகவே பார்க்கிறேன்’ என்று கூறினார். எந்த கூட்டத்தில் பேசினாலும் தமிழ் மொழியின் சிறப்பைப்பற்றி பேசுவதிலும், தமிழ் கலாசாரம்-பண்பாடு பற்றி பேசுவதிலும், திருவள்ளுவர்-பாரதியார் போன்றவர்களின் படைப்புகளில் இருந்து மேற்கோள்காட்டுவதிலும் அவர் தவறியதே இல்லை. அவ்வளவு ஏன் ஐ.நா. சபை கூட்டம், இந்தியா-சீனா மாநாட்டில் கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலை குறிப்பிட்டார்.

2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீன பிரதமர் ஜின்பிங்கை மாமல்லபுரத்துக்கு அழைத்துக்கொண்டு வந்து 2 நாட்கள் பேச்சுவார்த்தை-மாநாடுகள் நடத்தினார். அந்த நேரங்களில் அவர் தமிழக பண்பாட்டு சின்னமாக விளங்கும் வெள்ளைநிற வேட்டி-சட்டை, அங்கவஸ்திரம் அணிந்திருந்தது எல்லோரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. இதுபோலவே அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப்பையும் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவுக்கு அழைத்ததுடன், குஜராத்துக்கும் உடன் அழைத்துச் சென்றார். இந்தமுறை நரேந்திரமோடியின் ஆட்சியில் இந்தியா நல்ல முன்னேற்றங்களை கண்டுள்ளது. கொரோனாவை கையாளுவதிலும், மிகத்திறமையாக தன் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளார். மொத்தத்தில் முதல்-மந்திரி நரேந்திரமோடி என்ற 12 ஆண்டுகளும் 227 நாட்களும், பிரதமர் நரேந்திரமோடி என்று இதுவரை கழித்த 7 ஆண்டுகளும் 133 நாட்களும் அவருக்கு பெருமை சேர்ப்பதாகவும், முத்திரை பதிப்பதுமாகவே அமைந்துள்ளது.

Next Story