பாதுகாப்பான, மகிழ்ச்சிகரமான தீபாவளி!


பாதுகாப்பான, மகிழ்ச்சிகரமான தீபாவளி!
x
தினத்தந்தி 1 Nov 2021 7:56 PM GMT (Updated: 2021-11-02T01:26:46+05:30)

இந்திய கலாசாரம் என்பது பண்டிகைகள் நிறைந்த கலாசாரம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு வரலாறு இருக்கிறது.

இந்திய கலாசாரம் என்பது பண்டிகைகள் நிறைந்த கலாசாரம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வகையில், 4-ந்தேதி கொண்டாடப்போகும் தீபாவளியை தீப ஒளி திருநாள் என்று முன்னோர்கள் குறிப்பிட்டார்கள். அதாவது, தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள். ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள். அதை குறிப்பிடும் வகையில்தான், வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியை கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

மக்களின் இல்லங்களில் மட்டுமல்லாமல், உள்ளங்களிலும் மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. என்று மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடும் தீபாவளி கொண்டாடப்படுவதன் காரணம், தீமையின் அடையாளமான நரகாசூரனை கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்து வதம்செய்து கொன்ற நாள். தேவர்களுக்கும், மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்த நரகாசூரன், தான் இறக்கப்போகும் நேரத்தில், சத்தியபாமாவிடம், “நான் மறைந்த இந்தநாள் மக்களின் மனதில் நிற்கவேண்டும். இந்தநாளை இனிப்பு வழங்கி ஒளிமயமாக கொண்டாடவேண்டும்” என்று வேண்டினார். சத்தியபாமாவும் அவருக்கு வரம் கொடுத்தார். இதையொட்டித்தான், தீபாவளி அன்று மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகளோடு ஒளிமயமாக, பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள்.

ஆக, பட்டாசு என்பது ஒரு பக்கம் லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குகிறது என்றாலும், மற்றொரு பக்கம் மகிழ்ச்சிகரமான தீபாவளியை கொண்டாடும் நடைமுறையாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, பசுமை பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதி கொடுத்துள்ளது. மேலும், பேரியம் கலந்த பட்டாசுகள், சரவெடிகளுக்கு தடைவிதித்துள்ளது. மற்றபடி, பட்டாசு வெடித்து கொண்டாடுவதற்கு தடையில்லை. ஆனால், தீபாவளி அன்று காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவுதான் சற்று இடையூறான கட்டுப்பாடாகும். ஒரே நேரத்தில் அனைத்து மக்களும் பட்டாசு வெடிப்பதால்தான் சுற்றுச்சூழல் மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படும். நேரக்கட்டுப்பாடு இல்லையென்றால், எல்லோரும் அவரவர் விரும்பிய நேரத்தில் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவது பெருமளவில் குறையும்.

மேலும், மக்களும் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் ஆகியோர், தீபாவளி கொண்டாட்டத்தின்போது, பட்டாசு வெடிக்கின்ற நேரத்தில் செய்யக்கூடியது என்ன?, செய்யக்கூடாதது என்ன? என்று பல விழிப்புணர்வு அறிவுரைகளை கூறியுள்ளனர்.

“பெரியவர்களின் மேற்பார்வையில் பட்டாசுகளை வெடியுங்கள். குடிசைகள் இல்லாத திறந்த வெளியில் பட்டாசு வெடியுங்கள். பட்டாசு கொளுத்தும்போது, இறுக்கமான ஆடை அணியுங்கள். ஒரு வாளி நிறைய நீர் பக்கத்தில் பாதுகாப்புக்கு இருக்கட்டும். நீண்ட பத்திகளை கொண்டு பட்டாசு வெடிக்கச்செய்யுங்கள். எதிர்பாராத விதமாக தீப்பற்றிக் கொண்டால், உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள். அல்லது கீழேப்படுத்து உருளுங்கள். தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்றுங்கள். மை, எண்ணெய் பயன்படுத்தாதீர்கள். மருத்துவரிடம் செல்லுங்கள். எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டால், உங்களுக்கு உதவுவதற்காக நாளை பிற்பகலில் இருந்தே தீயணைப்பு நிலையங்களில் தயாராக இருப்போம்” என்று பிரியா ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.

டாக்டர் செல்வவிநாயகம் கூறிய அறிவுரைகளில், “சானிடைசர் பயன்படுத்திக்கொண்டோ, சானிடைசரை பக்கத்தில் வைத்துக்கொண்டோ பட்டாசு வெடிக்காதீர்கள்” என்பதுபோன்ற பல பாதுகாப்பு வழிமுறைகளை தெரிவித்திருக்கிறார். “தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையெல்லாம் மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில், விழிப்புணர்வு அறிவுரைகள் தமிழக அரசால் உடனடியாக வெளியிடப்படவேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கிறது. மொத்தத்தில் இந்த தீபாவளி மகிழ்ச்சிகரமான தீபாவளியாக மட்டுமே இருக்கவேண்டுமே தவிர, பாதுகாப்பற்ற தீபாவளியாக இருக்கக்கூடாது.

Next Story