‘நீட்' தேர்வில் சி.பி.எஸ்.இ. ஆதிக்கம் !


‘நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. ஆதிக்கம் !
x
தினத்தந்தி 31 Jan 2022 7:43 PM GMT (Updated: 2022-02-01T01:13:16+05:30)

தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதற்கு முன்பு இருந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் சரி, இப்போதுள்ள தி.மு.க. ஆட்சியிலும் சரி, தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ தேர்வு தேவையில்லை என்பதையே தங்கள் உறுதியான நிலைப்பாடாகக்கொண்டு, சட்டமன்றத்தில் இதுகுறித்த மசோதாக்களை நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்துள்ளார்கள்.

தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மசோதா மீது கவர்னர் இன்னும் நடவடிக்கை எடுத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை. இதுதொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். 11 மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் தொடங்கிவைத்த நாளில், காணொலி காட்சியில் நேரிலேயே வலியுறுத்தினார். ஆனாலும் மத்திய அரசாங்கத்திடமிருந்து இன்னும் எந்த பதிலும் வராதநிலையில், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான தரவரிசைப்பட்டியல் ‘நீட்’ தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே வெளியிடப்பட்டது.

தமிழக அரசு தன் கோரிக்கைக்கு காரணமாக, “நீட் தேர்வு வினாக்கள் சி.பி.எஸ்.இ. என்று கூறப்படும் மத்திய கல்வித்திட்ட பாடங்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுகிறது. மாநில கல்வித்திட்டத்தில் படிக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இந்த தேர்வில் கலந்துகொள்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்று கூறுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், இப்போது வெளியிடப்பட்டிருக்கும் தரவரிசைப்பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்திருப்பவர்களில், 10-வது இடத்தில் இருக்கும் சேலம் மாவட்டத்தைச்சேர்ந்த மணிமாறனை தவிர, மற்றவர்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள்.

இதுபோல, நிர்வாக ஒதுக்கீட்டுப்பிரிவில் 10 இடங்களை பிடித்தவர்களின் பட்டியலை பார்த்தாலும், 9 பேர் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள்தான். இதுமட்டுமல்லாமல், இந்தாண்டு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 15 ஆயிரத்து 275 பேர், ஏற்கனவே ‘நீட்’ தேர்வு எழுதி, இப்போது 2 அல்லது 3-வது முறையாக தேர்வு எழுதியவர்கள் ஆவார்கள். 10 ஆயிரத்து 318 பேர்தான் இந்த ஆண்டு முதல்முறையாக தேர்வு எழுதியவர்கள். தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வு வேண்டாம் என்று நடத்தும் போராட்டம் நியாயமான கோரிக்கையின் அடிப்படையில்தான் நடத்தப்படுகிறது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியின்போது 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டுவந்ததன் பயனாக, இந்த ஆண்டு 534 இடங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தமிழ்நாட்டில், தற்போது 37 அரசு மருத்துவக்கல்லூரிகளும், 18 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளும், 2 அரசு பல் மருத்துவக்கல்லூரிகளும், 18 சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகளும் இருக்கின்றன. மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையை பொறுத்தமட்டில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கியபிறகு, 6 ஆயிரத்து 999 இடங்கள் இருக்கின்றன. இதுபோல அரசு பல் மருத்துவக்கல்லூரி, சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் 1,930 இடங்கள் உள்ளன. இப்போது தரவரிசைப்பட்டியல் 24 ஆயிரத்து 949 மாணவர்களுக்கு வெளியிடப்பட்டிருக்கிறது. ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேரும் கணக்கை பார்த்தால், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் அதிகமாக இடம்பெறும் வாய்ப்பு இருக்கிறது.

இதனால்தான் மாநில கல்வித்திட்டத்தில் படிக்கும் மாணவர்களில் ஓரளவு வசதியுள்ளவர்கள் பிளஸ்-1, பிளஸ்-2 படிப்புக்காக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கற்றுக்கொடுக்கும் பள்ளிகளில் சேர்ந்து விடுகிறார்கள். இப்போதுள்ள நிலையில், ‘நீட்’ தேர்வு என்பது நிச்சயமாக மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையான ஒன்று. இந்த சூழ்நிலையில், தமிழக அரசு அனைத்து பள்ளிக்கூடங்களிலும் உடனடியாக ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி தொடங்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருப்பது நிச்சயமாக வரவேற்கத்தக்கது.

எல்லா பள்ளிக்கூடங்களிலும், பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு அளிக்கப்படும் முன்னுரிமையை, ‘நீட்’ தேர்வுக்கும் அளித்தால்தான், வரும் ஆண்டுகளில் ஏழை-எளிய கிராமப்புற மாணவர்கள் இன்னும் அதிகமாக மருத்துவக்கல்லூரிகளில் சேர முடியும். எனவே, ஒரு பக்கம் ‘நீட்’ தேர்விலிருந்து விலக்குபெற எடுக்கும் முயற்சிகளுக்கு இணையாக, ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சிகளையும் வழங்கவேண்டும் என்பதே இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியல் காட்டும் யதார்த்த உண்மையாகும்.

Next Story