மீனவர் பிரச்சினை தீர்வில் நம்பிக்கை தெரிகிறது!


மீனவர் பிரச்சினை தீர்வில் நம்பிக்கை தெரிகிறது!
x
தினத்தந்தி 15 March 2022 7:38 PM GMT (Updated: 15 March 2022 7:38 PM GMT)

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த, இலங்கை அரசாங்கத்துக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவில் அந்தோணியார் கோவில் இருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த, இலங்கை அரசாங்கத்துக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவில் அந்தோணியார் கோவில் இருக்கிறது. இந்த கோவிலை கட்டியது, ஒரு தமிழர்தான். ஆண்டாண்டு காலமாக, இந்த அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களும் செல்வது வழக்கம். அப்போதெல்லாம் இருநாட்டு மீனவர்களின் குடும்பத்தினரும், ஒருவரையொருவர் உறவு சொல்லிக்கொண்டு பரஸ்பரம் பரிசு பொருட்களை பரிமாறிக்கொள்வார்கள். ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவார்கள். திருவிழா முடிந்தவுடன் பிரியமனமில்லாமல் பிரியாவிடை கொடுப்பார்கள்.

அப்படிப்பட்ட உறவில் பிற்காலங்களில் விரிசல் வந்தது. கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது, தாக்குதல் நடத்துவதோடு, இலங்கை மீனவர்களும், குறிப்பாக வடக்கு மாகாண தமிழ் மீனவர்களும் தாக்குதலை தொடர்ந்தனர். இருநாட்டு மீனவர்களுக்கும் இடையே சகோதர யுத்தம் நாள்தோறும் நடந்தது. இதற்கு முடிவு வராதா? என்று எல்லோரும் கவலைப்பட்டனர். அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. பிரதமரும், இலங்கை அதிபரும் பேசினார்கள்.

ஆனால், இதுவரை தீர்வுகாணப்படாத நிலையில், இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவின்போது, இலங்கை கடல் தொழிலாளர் மந்திரி டக்ளஸ் தேவானந்தா முயற்சியில், இந்த பிரச்சினைக்கான தீர்வில் முதல்கட்டம் வந்துவிட்டது. கச்சத்தீவில் தமிழகத்திலுள்ள நாட்டுபடகு மீனவர்களும், விசைப்படகு மீனவர்களும், இலங்கை சார்பாக வடமாகாண மீனவர்கள், குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மீனவர்களும் அமர்ந்து, டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் பேச்சுவார்த்தையை தொடங்கினார்கள்.

இலங்கை மீனவர்கள், “இந்திய விசைப்படகுகள் இழுவலையுடன் வருகின்றன. ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் வந்து, இந்த வலையை பயன்படுத்தி கடலின் தரை வரைபோய் மீன் குஞ்சுகள் முதற்கொண்டு அனைத்தையும் அள்ளிக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். எனவே, இந்த படகுகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. அதே சமயத்தில், நாட்டு படகு மீனவர்களால் எங்களுக்கு பாதிப்பு இல்லை. எனவே, தமிழக மீனவர்களின் நாட்டுப்படகுகளை இலங்கை கடற்பகுதிக்குள் அனுமதிக்கலாம்” என்று ஒரு நல்ல முடிவை தெரிவித்தனர்.

தமிழக மீனவர்கள், “எங்களால் பாதிப்பு எதுவும் இருக்காது. பாரம்பரியமாக மீன்பிடித்து வருகிறோம். எங்களை அனுமதிக்க வேண்டும்” என்று கூறினர். இருதரப்பு மீனவர்களின் கருத்தை கேட்டுக்கொண்ட டக்ளஸ் தேவானந்தா, “நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. இந்த மாத இறுதியில் எங்கள் மந்திரி சபை கூட்டம் நடக்கிறது. அங்கு இதை தெரிவிப்பேன். இதுமட்டுமல்லாமல், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இம்மாத இறுதியில் இலங்கை வருகிறார். அவரிடமும் இந்த பேச்சு விவரத்தை தெரிவிக்கிறேன்” என்றார்.

இதன் பிறகு, தமிழக நாட்டுப்படகு மீனவர்கள், இலங்கை வடமாகாண மீனவர்கள் தரப்பில் தலா 10 பேர் கொண்ட கடல்வள பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. “மீனவர் பிரச்சினை தீர்வுக்கு இது நல்ல அறிகுறி. அதன்பிறகு, கச்சத்தீவுக்கு வந்த இலங்கை கடற்படை தளபதியிடமும், இலங்கையிலுள்ள இந்திய துணைத்தூதரான மதுரையை சேர்ந்த நடராஜனிடமும், நெடுந்தீவு வட்டார செயலாளரிடமும் பேசினோம். இந்த முறை கச்சத்தீவு திருவிழாவில் அடுத்தடுத்த சந்திப்புகள் நடந்தது, நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது” என்கிறார், நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் பாம்பன் எஸ்.பி.ராயப்பன்.

இலங்கை மீனவர்கள், “தமிழக நாட்டுப்படகு மீனவர்கள் வந்து மீன்பிடிக்கலாம்” என்று கூறிய கருத்துகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்திடம் மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் வலியுறுத்தவேண்டும். தொடர்ந்து, மற்ற பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண கச்சத்தீவு திருவிழா நல்ல வழியை காட்டிவிட்டது.

விரைவில் இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திரமோடியும் இலங்கை-தமிழக மீனவர்களின் சந்திப்பு அடிக்கடி நடப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். இருநாட்டு மீனவர்கள் முகமுகமாய் உட்கார்ந்து பேசினால், எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்பது, இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இருந்தே தெரிகிறது.

Next Story