கட்டாயம் இல்லை; ஆனால் போட்டுக்கொள்ள வேண்டும்!


கட்டாயம் இல்லை; ஆனால் போட்டுக்கொள்ள வேண்டும்!
x
தினத்தந்தி 5 May 2022 8:02 PM GMT (Updated: 2022-05-06T01:32:25+05:30)

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலகம் முழுவதுமே உலுக்கிய கொரோனா, இப்போது குறைந்திருந்தாலும் முற்றிலுமாக இல்லாமல் போய்விடவில்லை.

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலகம் முழுவதுமே உலுக்கிய கொரோனா, இப்போது குறைந்திருந்தாலும் முற்றிலுமாக இல்லாமல் போய்விடவில்லை. இந்தியாவில் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உள்ளே நுழைந்த கொரோனா, மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டில் தன் கால் தடத்தை பதித்தது. ஆரம்பகாலங்களில் பாதிப்பு மிக வேகமாகவே இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், மருத்துவ நிபுணர்கள், “முககவசம் அணிவது கட்டாயம். தடுப்பூசி என்பது காக்கும் கேடயம்” என்று தெரிவித்தனர்.

இந்தியாவில், முதலில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. பின்னர், ஒவ்வொரு கட்டமாக வயது வரம்பு நீக்கப்பட்டு, இப்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் வேலை தீவிரமாக நடந்துவருகிறது. பல நாடுகளில், “2 டோஸ் தடுப்பூசி போடாதவர்கள், தங்கள் நாட்டுக்கு வரமுடியாது” என்ற கட்டுப்பாடு இருக்கிறது. ரெயில், விமானங்களில் 2 தவணை தடுப்பூசி போட்டவர்கள்தான் பயணம் செய்ய முடியும். இதுபோல, அரசு அலுவலகங்கள் உள்பட பல இடங்களில் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் என்று வலியுறுத்தப்படுகிறது.

“இவ்வாறு தடுப்பூசி போடுவதை கட்டாயப்படுத்தக்கூடாது. பொது இடங்களில் தடுப்பூசி போட்டவர்களுக்குத்தான் அனுமதி என்றநிலை இருக்கக்கூடாது” என்பதை வலியுறுத்தி, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்து, “தடுப்பூசி போடவேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. பொது இடங்களில் தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி இல்லை. வணிக வளாகங்களில் அனுமதி இல்லை. அலுவலகங்களில் அனுமதி இல்லை என்று கூறி, தடுப்பூசி போட்டவர்களுக்கும், தடுப்பூசி போடாதவர்களுக்கும் இடையே பாகுபாடு இருக்கக்கூடாது. இவ்வாறு பொதுமக்களை கட்டாயப்படுத்துவது, அரசியல் சட்டம் 21-வது பிரிவின்கீழ் சட்டவிரோதமானது. அதேநேரம், பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, கொள்கை முடிவுகளை எடுக்கவும், தகுந்த காரணத்துடன் கூடிய கட்டுப்பாடுகளை விதிக்கவும், மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டுதான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. கொரோனா தொற்றை தடுக்கவும், பரவலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க அரசுக்குள்ள உரிமையில் தலையிடுவதாக எடுத்துக்கொள்ளக்கூடாது” என்று தீர்ப்பளித்துள்ளது.

யாரையும், எதற்கும் கட்டாயப்படுத்தக்கூடாது, அது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. குடும்ப கட்டுப்பாடு நல்லதுதான். என்றாலும், அது மக்களின் முடிவுக்கே விட்டுவிடப்படுகிறது. இதுபோல, போலியோ தடுப்பூசி, காசநோய் தடுப்பூசி போன்ற பல தடுப்பூசிகளும் போடுவதற்கு கட்டாயப்படுத்தப்படுவதில்லை. ஆனால், தமிழகத்தை பொறுத்தமட்டில், முககவசம் அணியாவிட்டால், ரூ.500 அபராதம் என்று சொல்லிய நேரத்தில், எல்லோரும் முககவசம் அணிந்தார்கள். “இனி அபராதம் கிடையாது, ஆனால் முககவசம் அணிய வேண்டும்” என்று சொல்லிய பிறகு, நிறைய பேர் முககவசம் அணிவதை விட்டுவிட்டார்கள்.

“பொது இடங்களில் முககவசம் அணிந்துதான் வரவேண்டும்” என்று சொன்ன பிறகு, இப்போது அங்கு வருபவர்கள் முககவசம் அணிந்து வருவதை பார்க்க முடிகிறது. எனவே, மக்களின் மனநிலையில் மாற்றம் வரவேண்டும். அதற்குரிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் 92.77 சதவீதம், 2-வது டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் 79.21 சதவீதம். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட முடியாது என்றாலும், கொரோனாவில் இருந்து முழுவதும் மீள்வதற்காக, தமிழக அரசு 8-ந்தேதி ஒரு லட்சம் இடங்களில் நடத்தப்போகும் மெகா தடுப்பூசி முகாமில் மீதமுள்ளவர்களும், தடுப்பூசி போட்டுக்கொண்டு வரலாறு படைக்க வேண்டும். இப்போதுள்ள சூழ்நிலையில், தடுப்பூசி கட்டாயம் இல்லை என்றாலும், அதை விரும்பி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதே பொதுவான நிலைப்பாடாக இருக்கிறது.

Next Story