20 ஓவர் உலக கோப்பை: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை


20 ஓவர் உலக கோப்பை: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
x

image courtesy: ICC twitter

இன்று சிட்னியில் நடைபெறும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

சிட்னி,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று சிட்னியில் அரங்கேறும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் (குரூப்2) மோதுகின்றன.

2 வெற்றி (இந்தியா, வங்காளதேசத்துக்கு எதிராக), ஒரு முடிவில்லை என்று 5 புள்ளிகளுடன் உள்ள பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி அரைஇறுதிக்குள் நுழைந்து விடும். ஒரு வேளை தோற்றாலும் கடைசி லீக்கில் நெதர்லாந்தை தோற்கடித்தால் போதுமானது. முந்தைய ஆட்டத்தில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்ஆப்பிரிக்க அணி அதே வேட்கையுடன் பாகிஸ்தானையும் போட்டுத்தாக்க ஆயத்தமாக உள்ளது.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி (நெதர்லாந்துக்கு எதிராக), 2 தோல்வி (இந்தியா, ஜிம்பாப்வேக்கு எதிராக) என்று 2 புள்ளிகளுடன் பின்தங்கியிருக்கிறது. அந்த அணியை பொறுத்தவரை எஞ்சிய இரு ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதன் பிறகு மற்ற போட்டிகளின் முடிவு சாதகமாக அமைய வேண்டும். அதாவது தென்ஆப்பிரிக்க அணி தனது கடைசி லீக்கில் தோற்க வேண்டும். இல்லாவிட்டால் இந்திய அணி, தனது கடைசி போட்டியில் ஜிம்பாப்வேயிடம் மோசமான தோல்வியை தழுவ வேண்டும். இது போன்று நடந்தால் மட்டுமே பாகிஸ்தானுக்கு அரைஇறுதி கதவு திறக்கும். ஆனால் இன்றைய ஆட்டத்தில் தோற்றால் நடையை கட்ட வேண்டியது தான். கேப்டன் பாபர் அசாம் 3 ஆட்டத்திலும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இதனால் தான் ஜிம்பாப்வேயிடம் கூட ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்க நேர்ந்தது. அவர் பார்முக்கு திரும்ப வேண்டிய தவிப்பில் உள்ளார்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 21 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11-ல் பாகிஸ்தானும், 10-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. வானிலையை பொறுத்தவரை அங்கு இன்று மழை பெய்வதற்கு 11 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story